இந்தியாவின் வளர்ச்சியை குறைத்த ஐஎம்எஃப்! டிரம்ப் வரியால் இப்படி ஒரு சோதனை!
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்), இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சியை முன்கூட்டியே கணித்து வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது வர்த்தக போர் தொடங்கியுள்ளதால், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்று, வளர்ச்சி விகிதத்தை குறைத்து காட்டியிருக்கிறது.
வர்த்தக போர் காரணமாக, கடந்த 80 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உலகளாவிய பொருளாதார அமைப்பு இப்போது முற்றிலும் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஐஎம்எஃப் தெரிவித்திருக்கிறது. பழைய விதிகள் காலாவதியாகிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், புதிய விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் ஐஎம்எஃப் கவலை தெரிவித்திருக்கிறது.

டிரம்பின் நடவடிக்கை
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் போட்டியிட்டபோதே டிரம்ப், வரி விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். தங்கள் நாட்டுக்கு யார் யார் எவ்வளவு வரியை விதிக்கிறார்களோ, அவர்களுக்கும் அதே வரி விதிக்கப்படும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் விளக்கமளித்தார். அதேபோல அவர் அதிபராக வந்த பின்னர், சொன்னபடி பதிலடி வரியை போட்டார். இந்தியாவுக்கும் வரி விதிக்கப்பட்டது.
நட்பு நாடுகளுக்கும் வரி
நட்பு நாடுகளாக கருதப்படும் ஜப்பான், கனடாவுக்கு கூட வரியை போட்டார் டிரம்ப். ஆனால் எல்லா நாடுகளை விடவும், சீனாவுக்குதான் வரி அதிகமாக இருந்தது. பதிலடி வரி என்பது வர்த்தக யுத்தத்தை தான் உருவாக்குமே தவிர, அமெரிக்காவில் வளர்ச்சியை ஏற்படுத்தாது என்று பொருளாதார நிபுணர்கள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக சொன்னார்கள். டிரம்ப் கேட்கவில்லை. வரியில் கறாராக இருந்தார். விளைவு, மற்ற நாடுகளும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தின.
சீனாவின் பதிலடி வரி
குறிப்பாக சீனா, தங்கள் மீது அமெரிக்கா எவ்வளவு வரியை போட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு வரியை விதித்தது. இந்த பதிலடி வரிகள் வர்த்தக போரை உருவாக்கின. ஒரு கட்டத்தில் அமெரிக்கா திவால் ஆகும் நிலைக்கு சென்றுவிட்டது. எனவே 90 நாட்களுக்கு எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்ட வரியை நிறுத்தி வைப்பதாகவும், இது சீனாவுக்கு பொருந்தாது என்றும் டிரம்ப் அறிவித்தார்.
சீனா ஏன் முக்கியம்
சீனா சர்வதேச அளவில் மிக முக்கியமான நாடு. அமெரிக்கா, ஐரோப்பா, இதர பல மேற்கு நாடுகள் செய்யும் உற்பத்தியை சீனாவும், இந்தியாவும், வியட்நாமும் சேர்ந்து செய்துவிடுகிறது. அதில் 80 சதவிகிதம் அளவுக்கு சீனா மட்டுமே உற்பத்தியை கொடுக்கிறது. இப்படி இருக்கும்போது சீனா மீது வரி எனில், அது சும்மா இருக்குமா? பதிலுக்கு வரியை போட்டது. இதனால் உலகம் முழுவதும் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உற்பத்தியாகும் பொருட்கள் நுகர்வோர் கைகளுக்கு சரியான நேரத்தில் சென்றடையவில்லை.
இந்தியாவுக்கு பாதிப்பு
இது இந்தியாவையும் பாதித்திருக்கிறது. கடந்த காலங்களில் இந்தியாவின் வளர்ச்சி நிலையானதாகவே இருந்து வந்திருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு 6.5% வளர்ச்சியை எட்டும் என்று ஐஎம்எஃப் கணித்திருந்தது. ஆனால் வரி, அதனால் ஏற்பட்ட வர்த்தக யுத்தம் காரணமாக இந்த வளர்ச்சி 6.2% ஆக குறையும் என்று ஐஎம்எஃப் கூறியிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, உலகளாவிய வளர்ச்சியே 2.8% அளவிலும், சீனாவின் வளர்ச்சி 4.6% இலிருந்து 4.0% ஆகவும், அமெரிக்காவின் வளர்ச்சி 1.8% ஆகவும் குறையும் என்று ஐஎம்எஃப் கணித்திருக்கிறது.
அமெரிக்காவின் நிலை என்ன?
இப்படி உலகத்தின் வளர்ச்சியையே முடக்கும் வேலையை அமெரிக்கா இனியும் தொடர வேண்டுமா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். டிரம்ப் சொல்வதை போல சீன பொருட்களை அமெரிக்காவுக்குள் விடாமல் தடுத்து, அதற்கு பதிலாக அமெரிக்காவிலேயே அந்த பொருட்களை உற்பத்தி செய்யவது இப்போது நடக்கும் கதை கிடையாது. காரணம் அமெரிக்காவில் அதற்கான உள்கட்டமைப்புகள் எதுவும் கிடையாது. இதை சாத்தியப்படுத்த குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்கும்போது வீம்புக்கு வரி எதற்கு?












Click it and Unblock the Notifications