இந்தியாவுடன் ஒரு பெரிய டீல்.. இறுதிக் கட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம்..? சிக்னல் கொடுத்த டிரம்ப்!
வாஷிங்டன்: அடுத்த ஒன்றரை வாரத்திற்குள் நாடுகள் என்ன வரி விகிதத்தை செலுத்த வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் கடிதத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் தாம் பணியாற்றி வருவதாகவும் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது அமெரிக்காவும் அதே அளவு வரி விதிக்கும் என்ற பரஸ்பர வரி விதிப்பு நடைமுறை ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன்படி, டொனால்டு டிரம்ப் சமீபத்தில் சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது. இதனால், சீனாவுக்கான வரியை, 104 சதவீதமாக உயர்த்தினார். சீனா விடாப்பிடியாக அமெரிக்காவுக்கான வரியை, 84 சதவீதமாக உயர்த்தியது.
அதேசமயம், 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி, பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்தன. இதையடுத்து சீனாவை தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்தியா அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த கடைசி சுற்று பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய சந்தைகளைத் திறக்கும் ஒரு பெரிய ஒப்பந்தம் வரவிருப்பதாகவும், அது அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய சந்தைகளைத் திறக்கும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
"எல்லோரும் ஒரு ஒப்பந்தம் செய்து அதில் ஒரு பங்கைப் பெற விரும்புகிறார்கள். நாங்கள் நேற்று சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களுக்கு சில சிறந்த ஒப்பந்தங்கள் உள்ளன. இந்தியாவுடன் ஒரு பெரிய ஒப்பந்தம். நாங்கள் இந்தியா உடனான வர்த்தகத்தைத் திறக்கப் போகிறோம்," என்று டிரம்ப் வெள்ளை மாளிகை நிகழ்வில் கூறினார்.
ஜூலை 9 ஆம் தேதி பரஸ்பர வரி மீதான மூன்று மாத இடைநிறுத்தம் முடிவடைவதற்கு முன்பு இரு நாடுகளும் இதுதொடர்பான ஒரு ஒப்பந்தத்தை நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று சூசகமாக தெரிவித்திருந்தாலும் கூட, அதற்கு முன்பாகவே இந்த டீல் முடிவுக்கு வரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறினார். இந்த வார தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ப்ளூம்பெர்க் டிவியிடம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து எந்த விவரங்களும் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications