"ஈரான் மீது தாக்குதல் நடத்த தயார்" டிரம்ப் கடும் எச்சரிக்கை! மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்
வாஷிங்டன்: ஈரான் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள டிரம்ப், இதில் அமெரிக்கா தலையிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த சில நாட்களாகவே மிகப் பெரியளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு நகரங்களிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் கொந்தளித்த பொதுமக்கள் திடீரெனப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஈரான் பொருளாதாரம்
ஈரானில் இப்போது அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் ரியாலின் மதிப்பு 42,000ஐ தாண்டிவிட்டது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சுமார் ரூ.91ஆக இருக்கிறது. அதாவது சுமார் ரூ.91ஐ கொடுத்தால் நாம் ஒரு டாலர் கிடைக்கும். ஆனால், 42,000 ஈரான் ரியாலை கொடுத்தால் மட்டுமே ஒரு டாலர் கிடைக்கும். ஈரான் மீது அமெரிக்கா உட்படப் பல மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடையும் விதித்துள்ள சூழல், அங்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
மேலும், ஈரானில் பணவீக்கமும் 42%க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். ஈரானில் கடந்த சில ஆண்களில் இந்தளவுக்கு மக்கள் போராட்டம் நடந்ததே இல்லை. அங்குள்ள உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அரசு எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரியளவில் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டம்
"முல்லாக்கள் ஈரானை விட்டு வெளியேற வேண்டும்".. "சர்வாதிகாரத்திற்கு மரணம் வந்துவிட்டது" ஆகிய கோஷங்கள் உடன் ஈரான் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்படிச் சர்வாதிகாரக் குடியரசை விரும்பாத மக்களின் உண்மையான குரல் அங்கு மிகப் பெரியளவில் ஒலிக்க ஆரம்பித்துள்ளதாக ஈரானிய அமெரிக்கச் செய்தியாளர் மாசி அலினெஜாத் தெரிவித்துள்ளார். 92 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஈரானில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியும், சட்டம்- ஒழுங்குச் சீர்குலைவும் அங்குள்ள கமேனி அரசுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
உயிரிழப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 5வது நாளாகப் போராட்டம் தொடரும் நிலையில், இதனால் அங்குச் சுமார் பலர் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே ஈரானில் அமைதியாகப் போராடும் மக்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமைதியாகப் போராடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால்.. அமெரிக்கா அதற்கு எதிராகச் செயல்படத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
டிரம்ப் எச்சரிக்கை
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஈரான் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொன்றால், அமெரிக்கா அவர்களுக்கு உதவ வரும். நாங்கள் முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறோம்.. எந்த நேரத்திலும் செயல்படத் தயாராக உள்ளோம். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தலைமை பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் பிராந்தியம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் மூத்த ஆலோசகரான அலி லாரிஜானி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications