சந்திரிகா குமாரதுங்காவை கொல்ல திட்டமிட்ட வழக்கு... இருவருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறை
கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு 290 மற்றும் 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறை தண்டனைகள் முப்பது ஆண்டுகளில் கழிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

சந்திரிகா குமாரதுங்க மீது கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிபர் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, வெடி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், சந்திரிகாவின் பாதுகாவலர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். சந்திரிகாவின் ஒரு கண் பறிபோனது. அவர் உள்பட 80 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் இன அழிப்பு குற்றமாகும் என அரச தரப்பு வாதிட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேலாயுதன் வரதராஜா, ரகுபதி சர்மா, ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்ட வேலாயுதன் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகளும், ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து பத்மினி ரணவக்க உத்தரவிட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அளித்த நீதிபதி பத்மினி ரணவக்க அறிவித்தார்.
எனினும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு 270 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications