"இதுக்கு ஓகேனா போரை நிறுத்துகிறேன்.." இறங்கி வரும் புதின்? புதிய கோரிக்கைகள் லிஸ்ட் என்ன தெரியுமா
மாஸ்கோ: உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்றே யாருக்கும் தெரியாத சூழல் நிலவும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போர் தொடர்கிறது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர பல நாடுகள் முயன்று வரும் நிலையில், துருக்கி இரு நாடுகளுக்கும் பொதுவாக இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வர முயல்கிறது. உக்ரைன் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு கூட துருக்கியில் தான் நடந்தது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியாத சூழல் நிலவும் நிலையில், நேற்று ரஷ்ய அதிபர் புதின் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் தொலைப்பேசி வழியாக உரையாடி உள்ளார். அப்போது உக்ரைன் உடனான போர் முடிவுக்கு வர தனது கோரிக்கைகள் என்ன என்பதை புதின் தெளிவாக விளக்கி உள்ளார். ரஷ்யா வைத்துள்ள கோரிக்கைகள் இரண்டு வகைகளில் உள்ளன.

கோரிக்கைகள்
அதில் முதல் நான்கு கோரிக்கைகள் எளிமையானது. உக்ரைன் எளிதாக நிறைவேற்றும். அவற்றில் முக்கியமானது, உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும். நேட்டோவில் சேர விண்ணப்பிக்கக் கூடாது ஆகியவை ஆகும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கனவே தாங்கள் நேட்டோ அமைப்பில் இணைய இனியும் ஆர்வம் காட்டப் போவதில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், மற்ற கோரிக்கைகள், உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வி அடையவில்லை என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில் உள்ளது.

ராணுவ குறைப்பு
உக்ரைன் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக உக்ரைன் ராணுவம் ஆயுதக் குறைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். உக்ரைன் ரஷ்ய மொழிக்கு சட்டப்படி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், உக்ரைன் நாட்டில் ரஷ்ய மொழி பேசுபவர்களைக் குறி வைத்துக் கொல்லும் நாஜி கலாசாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல் நிபந்தனைகளில் உள்ளது. இவற்றை உக்ரைனால் எளிதாக நிறைவேற்ற முடியும்.

கடினமான கோரிக்கைகள்
ஆனால், இரண்டாம் வகையில் உள்ள நிபந்தனைகள் நிறைவேற்றக் கடினமானதாக உள்ளது. அதாவது அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் முன்பு, ஜெலன்ஸ்கி உடன் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும் என புதின் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா முறைகேடாக தன்னுடன் இணைத்துக் கொண்டது. கிரிமியா ரஷ்யாவின் பகுதியாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் புதின் வலியுறுத்தி உள்ளார். மேலும், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டான்பாஸ் பகுதி குறித்தும் சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளார்.

முடியாத கோரிக்கைகள் இல்லை
இவை சற்று கடினமான நிபந்தனை என்றாலும் கூட, பலரும் அஞ்சிய வகையில் நிறைவேற்றவே முடியாத நிபந்தனைகளை புதின் விதிக்கவில்லை. இந்தப் போர் காரணமாக உக்ரைன் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. ரஷ்யா ராணுவத்தின் ஷெல் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ் தொடங்கிப் பல முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, புதினின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என்றே கூறப்படுகிறது.

அதிபர் புதினுக்கு வெற்றியா?
இதை புதின் தனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என கூறி கொள்ளலாம். ஆனால், உண்மையில் சர்வதேச அரங்கில் உக்ரைன் போர் என்பது புதினின் பலத்தைக் குறைத்தே காட்டியுள்ளது. உக்ரைன் ராணுவத்தை ரஷ்யாவால் முழுமையாக வீழ்த்த முடியவில்லை. பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தை முன்னேற விடாமல் உக்ரைன் ஸ்திமிக்க செய்துள்ளது. இதன் காரணமாகவே உக்ரைன் உடனான இந்தப் போரில் புதின் சற்றே இறங்கி வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications