மீண்டும் சோவியத் யூனியன்? உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள்.. ரஷ்யா போடும் ஸ்கெட்ச்.. பரபர பின்னணி
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு வருவது உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
Recommended Video
கம்யூனிச நாடுகளில் ஒன்றாக இருந்த சோவியத் ஒன்றியம் கடந்த 1991 டிசம்பர் மாதம் வீழ்ச்சி அடைந்தது. அப்போது ரஷ்யா, உக்ரைன் பெலராஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவானது.
இருப்பினும், புதின் தலைமையிலான ரஷ்யாவுக்கு மீண்டும் சோவியத் யூனியன் கட்டமைக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

உக்ரைன் எல்லை
இந்தச் சூழலில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்றான உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த 2014இல் கிரிமியாவை இதேபோன்ற நடவடிக்கைகளுக்குப் பின்பு தான் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்தது. இதனால் ரஷ்யாவுடன் பல்வேறு மேற்குலக நாடுகளும் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருந்தாலும் கூட ரஷ்யா தனது படைகளைப் பின்வாங்குவதாக தெரியவில்லை.

ரஷ்யா விளக்கம்
மேற்குலக நாடுகள் தேவையில்லாமல் அச்சப்பட்டுக் கொள்வதாகவும் ரஷ்யாவுக்குப் போர் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அந்நாட்டின் தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது இதை அப்படியே உண்மையென நம்ப மேற்குலக நாடுகள் தாயாராக இல்லை. எனவே, ரஷ்ய அதிபர் புதினின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

ஏன் முக்கியம்
புவியியல் ரீதியாக உக்ரைன் மிக முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என இரு நாடுகளுடனும் உக்ரைன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ரஷ்யாவுடன் ஆழமான கலாசார உறவுகளைக் கொண்டுள்ள உக்ரைனில் ரஷ்ய மொழி பரவலாக பேசப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாக உக்ரைன் எடுத்து வரும் நடவடிக்கைகள், குறிப்பாக நோட்டோவில் சேரக்கூடாது என ரஷ்யா வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்
இருப்பினும், ரஷ்யாவின் வலியுறுத்தலுக்கு உக்ரனை செவி சாய்க்க மறுக்கிறது. கடந்த 2014இல் சோவித் யூனியன் காலத்து உக்ரைனின் அதிபர் பதவியை நீக்குவதாக உக்ரைன் அறிவித்தது, ரஷ்யாவுக்கு எச்சரிக்கை மணியாக இருந்தது. அதன் பின்னரே உக்ரைனின் தெற்கு தீபகற்பமான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதேபோல உக்ரைனின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றிய பிரிவினைவாதிகளையும் அது ஆதரித்தது. கடந்த 8 ஆண்டுகளாக அங்கு நடைபெறும் சண்டையில் இதுவரை 14,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேரடியாகத் தலையிட்ட அதிபர் பைடன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்ற மேற்குலக நாடுகள் நம்புகிறது. இதனால் தான் அவர்கள் ரஷ்ய அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். குறிப்பாக, ரஷ்ய அதிபர் புதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னரும் கூட ரஷ்யப் படைகள் உக்ரேனிய எல்லையில் உள்ளன. தாங்கள் படையெடுக்க மாட்டோம் என்பதற்கு ரஷ்யா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திடீர் திருப்பம்
இருப்பினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என்ற ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. ஜெனீவாவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூட இதைத்தான் கூறியிருந்தார். இந்தச் சூழலில் ரஷ்யா அதிபர் புதினின் மேற்குலக நாடுகளில் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான ராணுவ பதிலடி கொடுப்போம் எனப் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பைடனும் ரஷ்யா நிச்சயம் உக்ரைனில் சில பகுதிகளை ஆக்கிரமிக்கும் என்றும் இருப்பினும் முழு வீச்சில் போர் தொடுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் திட்டம்
அதேபோல உக்ரைனில் கிளர்ச்சியாளர் இருக்கும் பகுதிகளில் வாழும் 5 லட்சம் பேருக்கு ரஷ்யா தனது பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. இதன் மூலம் வரும் காலத்தில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா நுழைந்தால் தனது குடிமக்களைக் காக்கும் நடவடிக்கை என்று கூறிய ரஷ்யா தப்பித்துக்கொள்ளும். உக்ரைன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளில் நேட்டோ அமைப்பு வரக் கூடாது என்பதே ரஷ்யாவின் முக்கிய கோரிக்கை. இதை நிறைவேற்ற வேண்டும் என்றால் ஏற்கனவே நேட்டோ படைகள் உள்ள போலந்து, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா நாடுகளில் இருந்து நேட்டோ தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும். ரஷ்யாவுக்கு வேறு திட்டங்கள் இருப்பதையே இது காட்டுவதாக உலக நாடுகள் கூறுகின்றன.

உக்ரைனை காக்கும் அமெரிக்கா
இருப்பினும், இதை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தவில்லை என்றால் பெரும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உக்ரைன் நாட்டின் தற்காப்பு நடவடிக்கைகளுக்காகக் குறுகிய தூர மிசைல் தடுப்பு ஏவுகணைகளையும் அமெரிக்கா அளிக்கவுள்ளது. அதேபோல ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அஞ்சி, சுவீடன், டென்மார்க் நாடுகளும் தனது எல்லையில் வீரர்களைக் குவித்து வருகிறது.

அடுத்து என்ன
இதனால் உக்ரைன் எல்லையில் மட்டுமின்றி மேற்கு ஐரோப்பா முழுவதுமே சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவது குறித்த முடிவை உக்ரைன் தான் எடுக்க வேண்டும் என்றும் இதில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். அதேநேரம் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் அழுத்தம் அதைச் சற்று தாமதப்படுத்த மட்டுமே உதவும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications