"அவர்களுக்கு இப்போது தான் புரிகிறது.. ரஷ்யா நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது.." உக்ரைன் பரபர தகவல்
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.
உலக நாடுகள் இப்படி முழு வீச்சிலான போர் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்தப் போரைத் தடுக்க உலக நாடுகள் எடுக்கும் முயற்சிகளும் பெரியளவில் பலன் அளிப்பதாக இல்லை.

பேச்சுவார்த்தை
இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுவரை 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது.

உக்ரைன் தரப்பு
இதைத் தாண்டியும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த அமைதி பேச்சுவார்த்தை குறித்து வேறு சில கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கலந்து கொண்டார். இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கவில்லை
இந்தப் போரில் உக்ரைன் இந்தளவு எதிர்ப்பு காட்டி போராடும் என ரஷ்யா எதிர்பார்க்கவில்லை என்றும் உலக நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடைகளும் ரஷ்யாவை யோசிக்க வைத்துள்ளதாக மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார். மேலும், போரின் போரின் உண்மையான விலையை இப்போது தான் ரஷ்யா உணர தொடங்கி உள்ளதாகவும் ரஷ்யாவின் அணுகுமுறையில் மாற்றம் தெரிவதாகவும் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார்

உணர தொடங்கி உள்ளது
இது குறித்து மைக்கைலோ பொடோலியாக் மேலும் கூறுகையில், "போர் ஆரம்பித்த சமயத்தில், அவர்கள் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்த விரும்பினார்கள். ஆனால் உக்ரைன் இவ்வளவு கடுமையான எதிர்ப்பை காட்டும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இப்போது தான் ரஷ்யா மெல்ல உணர தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவே ரஷ்யா தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது.

ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை
இப்போது தான் நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குகிறோம். இந்தப் போரில் ரஷ்யா அதிகளவில் கருவிகள், ஆயுதங்கள், முக்கியமான வீரர்களை இழந்துள்ளது. இத்துடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளும் ரஷ்யா பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. ரஷ்யாவின் திட்டத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டன. இனியும் அவர்கள் முன்னெடுக்கும் போலி பிரசாரம் வேலை செய்யாது" என்று அவர் தெரிவித்தார்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
மேலும், உக்ரைன் வான்வழி மண்டலத்தை மறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று உக்ரைனின் கோரிக்கையையும் மைக்கைலோ பொடோலியாக் வலியுறுத்தினார். இரு தரப்புக்கும் இடையே பெலராஸ் எல்லையில் இதுவரை 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அடுத்து 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை (மார்ச் 7) நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் போர் நிறுத்தம் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார தடைகள்
இந்தப் போர் தொடங்கிய பின்னர், உலக நாடுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத் துறை அதிபர் சொத்துகளை முடங்க அனுமதி அளித்துள்ளது. விசா மற்றும் மாஸ்டர் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தி வைத்துள்ளன. அதேபோல சாம்சங் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் தனது சேவைகளை நிறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications