போரால் சிதறிய உக்ரைன்.. பேச்சுவார்த்தையை தொடர ஜெலன்ஸ்கி கோரிக்கை.. ஆனாலும் ஒரு விஷயத்தில் உறுதி
கீவ் : உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக ரஷ்யா போரை நடத்தி வரும் நிலையில், ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது 31வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல் பாதாள அறைகளில் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் நகரில் 1000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கில் ரஷியப் படைகள் குண்டுவீசித் தாக்கியதில் சுமார் 300 பேர் இறந்ததாக உக்ரைன் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

முதற்கட்ட போர்
இந்நிலையில் உக்ரைனில் தங்களது ராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் போர் விதிமுறைகளை மீறி உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகளை குறி வைத்து ரஷ்ய படைகள் மீண்டும் மீண்டும் தாக்கி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விதிகள் மீறல்
கடந்த ஒரு மாதமாக குறைந்தபட்சம் விதிமீறி 34 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுடனான போரில் இதுவரை 1,351 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 3800க்கும் அதிகமான வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய நாள் முதல் 134 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கீவ்வை கைப்பற்ற தீவிரம்
மேலும் கோர தாக்குதலில் 184 பேர் காயமுற்றனர் எனவும், இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உக்ரைன் அமைச்சகம் கூறியுள்ளது. நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றனர். பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கண்டுகொள்ளாமல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கீவ்வை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

அமைதி பேச்சுவார்த்தை
இந்நிலையில் போர் குறித்து ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அமைதிக்காக உக்ரைன் தனது எந்த ஒரு பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்றும் அவர் கூறினார். வெள்ளியன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது வீடியோ உரையில், ரஷ்யப் பொதுப் பணியாளர்களின் துணைத் தலைவரான கர்னல் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்காய்க்கு ஜெலென்ஸ்கி பதிலளித்தார். ரஷ்யப் படைகள் இப்போது "முக்கிய இலக்கான டான்பாஸின் விடுதலையில்" கவனம் செலுத்தும் என்று கூறினார்.
Recommended Video

ரஷ்யா பின்வாங்கலாம்
ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கிழக்கு உக்ரைனின் டோன்பாஸ் பகுதியின் ஒரு பகுதியை 2014ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், மேலும் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோல் உட்பட உக்ரைனிலிருந்து அதிகமான பகுதியை கைப்பற்ற ரஷ்ய படைகள் போராடி வருகின்றன.ரஷ்ய துருப்புகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் இருந்து பின்வாங்கலாம் எனவும், ரஷ்யப் படைகள் ஆயிரக்கணக்கான துருப்புக்களை இழந்துவிட்டன என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications