11ஆவது நாளாக தொடரும் போர்.. 15 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்! அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமான கோரிக்கை
கீவ்: உக்ரைன் நாட்டில் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து ஆரம்பித்த போர், 11ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போர் தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே அங்குப் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், ரஷ்யா இப்படி முழு வீச்சில் போரை ஆரம்பிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
ரஷ்யாவின் இந்தப் போர் நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.

அகதிகள்
இருப்பினும், இந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் ரஷ்யாவை நிறுத்துவதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் உக்ரைன் போர் உச்சமடைந்தே வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் லட்சக் கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். போர் ஆரம்பித்து இன்றுடன் 11 நாள் ஆகும் நிலையில், இதுவரை சுமார் 15 லட்சம் மக்கள் உக்ரைன் நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போர் நிறுத்தம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே இதுவரை இரு கட்டங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், அது எந்த விதத்திலும் பலன் தரவில்லை.

மாறி மாறி குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரு நகரங்களில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியேறவில்லை என்றே செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டன. ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறித் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக உக்ரைன் தெரிவித்தது. இருப்பினும், உக்ரைன் வீரர்கள் அப்பாவி மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தப் பிடித்து வைத்துள்ளதாக ரஷ்யா பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தது.

அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்
இந்தச் சூழலில் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து உக்ரைன் நகரங்களை மீட்கப் பொதுமக்கள் களமிறங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நாம் வெளியே சென்று சண்டையிட வேண்டும். இந்த தீமையை நமது நகரங்களிலிருந்து விரட்ட வேண்டும், நம்மால் இது முடியும். ரஷ்யப் படைகளை இத்தனை நாட்கள் நாம் வலுவாக எதிர்த்துப் போராடி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் ராணுவம்
உக்ரைன் மீது கடந்த பிப். 24இல் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. போர் சில நாட்களில் முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் ராணுவம் துணிச்சலாகப் போராடியது. இதனால் பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் அருகே பல நாட்களாக ரஷ்ய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

உக்ரைன் அதிபர்
அதேநேரம் போர் சமயத்தில் உலக நாடுகள் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்களை அனுப்புவதாக மட்டுமே அறிவித்துள்ளது. உக்ரைன் பெரிதும் நம்பியிருந்த நேட்டோ அமைப்பு கூட முழு வீச்சில் உதவவில்லை. உக்ரைன் நாட்டை பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதையும் நேட்டோ அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications