இதுக்கு பெயர்தான் சொந்த காசில் சூனியமா? அமெரிக்க டாலரின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு
வாஷிங்டன்: அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. இந்த சரிவுக்கு காரணம் டிரம்பின் வரி அச்சுறுத்தல்தான் என்று சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா வரி விஷயத்தில் இவ்வளவு கடுமையாக நடக்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

வல்லரசு அமெரிக்கா
அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு. பொருளாதாரத்தில் கிங் மேக்கர். காரணம் அது டாலரை வைத்திருக்கிறது. உலகின் பெரும்பாலான பரிவர்த்தனைகள் டாலரில்தான் நடக்கிறது. எனவே அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் கடுமையான வரியை போடுகின்றன. இப்படி போட்டாலும் கூட, அமெரிக்காவுக்கு பெரிய இழப்பு ஏற்படப்போவது கிடையாது. இத்தனை ஆண்டு காலமாக இதுதான் நடைமுறை. ஆனால் டிரம்ப் திடீரென இந்த வரியை மாற்றப்போவதாக அறிவித்தார்.
சீனா மீதான வரி
மாற்றுவது எனில், அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரியை போடுகிறதோ? அவ்வளவு வரியை, அந்த நாடுகளுக்கு திருப்பி போடுவது என டிரம்ப் முடிவெடுத்தார். அதன்படி இந்தியாவுக்கு 26% வரி விதிக்கப்பட்டது. சீனாவுக்கு 84% சதவிகிதம் விதிக்கப்பட்டது. மற்ற நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் வரிக்கு பயந்துக்கொண்டிருந்த நிலையில், சீனா மட்டும் பதிலடி வரியை போட்டது. இதனால் கோபமடைந்த டிரம்ப் சீனா மீதான் வரியை 145% என்கிற அளவுக்கு உயர்த்தியிருக்கிறார்.
கிரேட் டிப்ரசன்
பதிலுக்கு சீனாவும் 125% வரியை அமெரிக்க பொருட்கள் மீது போட்டிருக்கிறது. வரி போரில் வெற்றி தோல்வி என்று ஒன்று கிடையாது. கவுரவத்திற்காக மாறி மாறி வரியை போட்டுக்கொள்ளலாம். ஆனால் இதை புரிந்துக்கொள்ளாத டிரம்ப், நிலைமையை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறார். எனவே உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் சரிந்தன. அமெரிக்காவில் கடந்த 2008ம் ஆண்டு கிரேட் டிப்ரசன் எனப்படும் மந்த நிலை ஏற்பட்டது. அப்படியான சூழல் அமெரிக்காவல் இப்போது உருவானது.
உஷாரான அமெரிக்கா
விவகாரம் கையை மீறி போவதை உணர்ந்த டிரம்ப், உலக நாடுகள் மீதான வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு சீனாவுக்கு பொருந்தாது என கறாராக பேசிவிட்டார்.
இது சீனாவை மேலும் சீண்டிவிட்டது. சீனா எடுத்த பதிலடி நடவடிக்கைகள் காரணமாக தற்போது உலக பொருளாதாரம் நிலையற்றதாக மாறியிருக்கிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பும் வீழ்ந்திருக்கிறது. பொதுவாக இந்திய ரூபாயின் மதிப்பை கணக்கீடு செய்ய வேண்டும் எனில், டாலருடன் ஒப்பிடுவோம். அதுவே, டாலரின் மதிப்பை கணக்கீடு செய்ய எங்கு போவது? நிபுணர்கள் இதற்கும் யோசனையை வைத்திருக்கிறார்கள்.
டாலரின் மதிப்பு
ஐரோப்பாவின் யுரோ மற்றும் ஸ்விஸ் பிராங் ஆகிய கரன்சியுடன் டாலரை ஒப்பிடுவார்கள். இது இரண்டும் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் கரன்சி. டாலரின் மதிப்பு குறையும்போது முதலீட்டாளர்கள் இந்த கரன்சியை நோக்கிதான் ஓடுவார்கள். எனவேதான் டாலரை ஒப்பிட இந்த கரன்சி பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தேதியில் அமெரிக்க டாலர், இந்த இரு நாட்டு கரன்சியுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது.
ஸ்விஸ் பிராங்குடன் ஒப்பிடுகையில், டாலரின் மதிப்பு கடந்த 2015ம் ஆண்டு இருந்த அளவுக்கு சரிந்திருக்கிறது. இதுவே, யுரோவுடன் ஒப்பிடுகளையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.
எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்
நெதர்லாந்தை சேர்ந்த Internationale Nederlanden Groep வங்கியின் மாற்று நாணய நிபுணர் பிரான்சிஸ்கோ பெசோல் இது குறித்து கூறுகையில், "இப்போது நடந்திருக்கும் டாலரின் சரிவு என்பது சாதாரணமானது கிடையாது. இது ஒரு டாலர் நெருக்கடி" என்று கூறியுள்ளார். அதேபோல ஜப்பானை சேர்ந்த Nomura வங்கியின் பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "மூலதன முதலீட்டாளர்கள் அமெரிக்கா மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளனர்.
சீனாவுக்கும் சிக்கல்
நெதர்லாந்தும், ஜப்பானும் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் என்பதால் அந்த நாட்டு வங்கி நிபுணர்களின் கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சரி அமெரிக்க டாலரின் மதிப்பு மட்டும்தான் வீழ்ச்சியடைந்ததா? என்று கேட்டால் இல்லை. சீன கரன்சியான யுவானின் மதிப்பும் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே அமெரிக்கா இந்த வர்த்தக மோதல்போக்கை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். டிரம்ப் தனது ஆட்டத்தை நிறுத்துவரா?












Click it and Unblock the Notifications