For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலிஃபோர்னியா செனட் தேர்தலில் தமிழ் வம்சாவளி அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): கலிஃபோர்னியா செனட் தேர்தலில் அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அவர் தமிழ்நாட்டைச் சார்ந்த அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சியாமளா கோபாலனின் மூத்த மகளாவார்.

US Tamil Kamala Harris contests for California Senator

அட்டர்னி ஜெனரல்

கலிஃபோர்னியாவில் டாக்டர் சியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவைச் சார்ந்த ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டி பேராசிரியர் டொனால்டு ஹாரிஸ்க்கும் மகளாக பிறந்த கமலாவின் முழுப் பெயர் கமலா தேவி ஹாரிஸ் ஆகும். ஹோவர்டு பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் படித்தார். யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் சட்டப்படிப்பு முடித்து விட்டு அல்மேடா கவுண்டி, சான் ஃப்ரான்சிஸ்கோ அட்டர்னி அலுவலகத்தில் பணியாற்றினார்.

2010 தேர்தலில் போட்டியிட்டு கலிஃபோர்னியாவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரலாக வெற்றி பெற்றார், ஆப்ரிக்கன் அமெரிக்க மற்றும் தெற்காசிய வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் அந்த பதவியில் வெற்றி பெற்றதும் அதுவே முதல் முறையாகும். கடந்த 2014 தேர்தலில் மீண்டும் இரண்டாவது தடவையாக அட்டர்னி ஜெனரலாக வெற்றி பெற்றார்.

கேங்க்ஸ்டர்ககளை ஒடுக்கியவர்

கடுமையான நடவடிக்கைகள் மூலம், கலிஃபோர்னியாவில் அட்டகாசம் செய்து வந்த வெளி நாட்டு கேங்க்ஸ்டர்களை ஒடுக்கியது அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். காவல்துறையை மேலும் நவீனமாக்குவதற்கும் முக்கியத்துவம் அளித்தார். பொருளாதார வீழ்ச்சியின் போது வீட்டுக் கடனால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 20 பில்லியன் டாலர்கள் வரை நிவாரணம் கிடைக்கச் செய்தார்.

ஒபாமாவுக்கு தேர்தல் பணி

ஒபாமா போட்டியிட்ட இரண்டு அதிபர் தேர்தல்களிலும் அவருக்காக கமலா ஹாரிஸ் மற்றும் தங்கை மாயா ஹாரிஸ் தேர்தல் பணியாற்றினர். 2012 தேர்தலில் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் கமலா ஹாரிஸ் சிறப்புரையாற்றினார்.

செனட் தேர்தலில் போட்டி

அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் இரண்டு செனட்டர்கள் உண்டு. தற்போதைய செனட்டர் கேவின் நியூசம் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதனால் செனட் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார்.

http://www.kamalaharris.org/ என்ற இணையதளம் மூலம் தேர்தல் நிதி திரட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க குடிமகன் மற்றும் க்ரீன்கார்டு வைத்து இருப்பவர்கள் மட்டுமே தேர்தல் நன்கொடை வழங்க முடியும். ஒரு போட்டியாளருக்கு ஒரு தேர்தலுக்கு 2600 டாலர்கள் வரையிலும் தனி நபர் ஒருவர் நன்கொடை கொடுக்கலாம். புதிய விதிமுறைகள் படி வேலைபார்க்கும் நிறுவனத்தின் பெயர் உட்பட விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும்.

கட்சியினர் ஆதரவு

செனட் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நாள் முதல் கமலா ஹாரிஸுக்கு ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். மச்சூசட்ஸ் மாகாண செனட்டர் எலிசபத் வாரன், நியூஜெர்ஸி செனட்டர் கோரி புக்கர், நியூயார்க் செனட்டர் கிர்ஸ்டன் ஜிலோப்ராண்ட் ஆகியோர் ஏற்கனவே கமலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் மேலும் பல முக்கிய தலைவர்களின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையிலும் செல்வாக்கு கொண்ட கமலா ஹாரிஸுக்கு, அதிபர் ஒபாமாவின் ஆதரவும் உண்டு. ஏற்கனவே கலிஃபோர்னியாவில் பிரபலமானவர் மற்றும் அட்டர்னி ஜெனரலாக மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் ப்ரைமரி தேர்தலில் எளிதாக வென்று விடுவார் என்று நம்பப்படுகிறது. உட்கட்சி தேர்தலில் வென்ற பிறகு ஜனநாயகக் கட்சியின் கோட்டையான கலிஃபோர்னியாவில், செனட் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

வழக்கறிஞர் குடும்பம்

கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் கலிஃபோர்னியாவில் பிரபல வழக்கறிஞர் ஆவார், கமலாவின் தங்கை மாயா ஹாரிஸும் ஒரு வழக்கறிஞர் தான். ஃபோர்ட் ஃபவுண்டேஷனில் வைஸ் பிரசிடெண்டாக பணியாற்றுகிறார். மாயாவின் கணவர் டோனி வெஸ்ட் அமெரிக்காவின் அசோசியேட் அட்டார்னி ஜெனரலாக இருக்கிறார். பெற்றோர்கள் பேராசிரியர், ஆராய்ச்சியாளர் என்ற போதிலும் அக்காவும் தங்கையும் மட்டுமல்லாமல் அவர்களது கணவன்மாரும் சட்ட வல்லுனர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செனட் தேர்தல் வெற்றி மூலம் தேசிய அரசியலுக்குள் நுழைய விரும்பும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் வருங்கால முக்கியத் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். எதிர்காலத்தில் அதிபர் தேர்தல் வேட்பாளராகும் வாய்ப்புள்ளவராகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழர் வம்சாவளியில் ஒருவர் அமெரிக்க அதிபரானல் அது தமிழுக்கும் பெருமைதானே!

English summary
Kamala Harris, the US based Tamil woman is contesting for senator post in California, US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X