கடைசி அமெரிக்கரை வெளியேற்றும் வரை.. ஆப்கானை விட்டு படைகள் வெளியேறாது: அதிபர் பிடன் அறிவிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் எல்லோரையும் வெளியேற்றும் வரை அங்கிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் வாங்காது, கூடுதல் காலம் அங்கு அமெரிக்க படைகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கும் தயார் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்டது தற்போது காபூலில் மட்டுமே அமெரிக்க படைகள் விமானம் நிலையம் அருகே குவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக ஆப்கான் அரசு கவிழ்ந்த நிலையில் தாலிபான்கள் அங்கு ஆட்சியை பிடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர், அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்க உள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெயரும் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் என்று மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து ஆப்கான் மக்கள் பலர், வெளிநாட்டினர், தூதரக அதிகாரிகள் வரிசையாக வெளியேறி வருகிறார்கள்.

படைகள் குவிப்பு
தற்போது ஆப்கானிஸ்தானில் காபூலில் இருக்கும் விமான நிலையத்தில் மட்டுமே அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. மக்களை வெளியேற்றும் விதமாக அங்கு மட்டுமே அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானின் மற்ற நகரங்களில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தீவிரமாக முயன்று வரும் ஆப்கான் மக்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்கும் உதவும் வகையில் அமெரிக்க படைகள் காபூலில் தங்கி இருக்கின்றன. காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒரே காரணத்தால்தான் மக்கள் கொஞ்சம் பாதுகாப்பாக வெளியேற முடிகிறது.

எவ்வளவு காலம்
இந்த நிலையில்தான் அமெரிக்க படைகள் காபூலில் கூடுதல் காலம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கும் தயார் என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். பிடன் தனது பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மக்களை வெளியேற்றுவதுதான் எங்களின் நோக்கம். அங்கு இருக்கும் எல்லா அமெரிக்க மக்களையும் வெளியேற்றும் வரை எங்கள் மிஷன் முடிவிற்கு வராது. தேவைப்பட்டால் காபூலில் கூடுதல் காலம் படைகளை வைத்து இருக்கவும் நாங்கள் தயார். ஆகஸ்ட் 31ம் தேதி படைகளை வாபஸ் வாங்காமல் கூடுதல் காலம் அங்கு படைகளை வைத்து இருக்கவும் தயார்.

கடைசி அமெரிக்கர்
காபூலில் இருக்கும் கடைசி அமெரிக்கரை வெளியேற்றும் வரை அங்கிருந்து நாங்கள் வெளியேற மாட்டோம். ஆப்கானிஸ்தானில் தற்போது நடக்கும் விஷயங்கள் எல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. நாங்கள் எப்போது படைகளை வாபஸ் வாங்கியிருந்தாலும் இதே நிலைமைதான் அங்கு இருந்திருக்கும். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது வெளிநாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தாலிபான்களும் உதவி வருகிறார்கள்.

உதவி
இத்தனை வருடங்கள் நாம் மோதி இருந்தாலும் கூட, இப்போது வெளிநாட்டு மக்களை வெளியேற்ற தாலிபான்கள் எங்களுக்கு உதவி வருகிறார்கள். தாலிபான்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை சேர்ந்த சில குடிமகன்கள் எங்களுக்கு கடந்த காலங்களில் உதவினார்கள். ஆனால் அவர்களை வெளியேற்றுவதுதான் கொஞ்சம் சிக்கலாகி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் நாங்கள் எந்த தோல்வியையும் சந்திக்கவில்லை. நாங்கள் சரியான முடிவே எடுத்துள்ளோம். எங்கள் முடிவில் மாற்றம் இல்லை, என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணி
அமெரிக்க படைகளின் இருப்பை மீட்பு பணிக்காக நீடிக்க வாய்ப்பு உள்ளதாக பிடன் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை நாட்கள் படைகள் நீட்டிக்கப்படும், எப்படி நீட்டிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. இதற்கு தாலிபான்கள் எப்படி எதிர்வினையாற்றும் என்றும் விவரம் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இதனால் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இவர்கள் எல்லோரையும் வெளியேற்ற வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.

என்ன நிலை
அதோடு ஆப்கானிஸ்தானின் மற்ற பகுதிகள் எதிலும் அமெரிக்க படைகள் இல்லை. காபூலில் விமான நிலையத்தில் மட்டுமே படைகள் உள்ளது. அப்படி இருக்கும் போது தாலிபான்களுக்கு இடையில் எப்படி அமெரிக்கர்களை அமெரிக்க படைகள் மீட்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் முழுக்க பல்வேறு மாகாணங்களில் வசித்து வருகிறார்கள். வெவ்வேறு மாகாணங்களில் தற்போது அவர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை எப்படி அமெரிக்க படைகள் மீட்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

விமான நிலையம்
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லியாட் ஆஸ்டின் அளித்துள்ள பேட்டியில், இது தொடர்பாக திட்டங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. மீண்டும் ஆப்கானிஸ்தானின் மற்ற நகரங்களுக்குள் நாங்கள் செல்ல முடியாது. எங்களிடம் அதற்கான ஆயுதங்களும் இல்லை. படை பலமும் இல்லை. இதனால் மற்ற நகரங்களில் இருக்கும் மக்களை எப்படி மீட்பது என்று தெரியவில்லை. இது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். தற்போது காபூல் விமான நிலையம் மட்டுமே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இன்னும் எத்தனை காலம் ஆப்கானிஸ்தானில் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

சிக்கல்
தாலிபான்கள் மற்ற நகரங்களில் நிறைய செக் போஸ்ட்களை அமைத்து உள்ளனர். இந்த செக் போஸ்ட்களை கடந்து மக்களை கொண்டு வருவது மிகவும் கடினம். எங்கள் இலக்கு இன்னும் தூரத்தில் இருக்கிறது. எப்படி எல்லோரையும் மீட்க போகிறோம் என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பேட்டி ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கர்கள் இடையே கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications