கனடாவின் புதிய பிரதமராகிறாரா தமிழர் அனிதா ஆனந்த்! வெற்றி வாய்ப்புகள் எவ்வளவு? கள நிலவரம் இதோ!
ஒட்டாவா: காலிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருந்த நிலையில், தனது பதவியை விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனையடுத்து கனடாவின் புதிய பிரதமராக தமிழரான அனிதா ஆனந்த் வெற்றிப்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ எப்போது காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க தொடங்கினாரோ அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையில் முட்டல் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் சொந்த கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

ட்ரூடோவுக்கு முன்னால் இருக்கும் வாய்ப்புகள்:
ட்ரூடோ நேற்று கட்சி தலைமை மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து இந்த ஆண்டு மார்ச் 24 தேதி வரை கனடா நாடாளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கட்சி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அவரே உடனடியாக பிரதமராக மாறுவார். ஆனால் ஒருவேளை மார்ச் 24ம் தேதி புதிய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அது வெற்றி பெறும் பட்சத்தில், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரூடோவே அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரையிலும் பிரதமராக தொடரும் வாய்ப்பு உள்ளது.
அனிதா ஆனந்துக்கான வாய்ப்பு என்ன?:
அனிதா ஆனந்த் கனடா லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர். மட்டுமல்லாது கடந்த 2019 முதல் எம்பியாக இருந்து வருகிறார். தற்போது உள்நாட்டு வர்த்தகத்துறை மற்றும் போக்குவரத்துறையின் அமைச்சராக இருந்து வருகிறார். இதற்கு முன்னர் பாதுகாப்பு, பொதுசேவைகள் துறைகளின் அமைச்சராகவும், கருவூல வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசு பொறுப்புகளையும் வகித்து வந்திருக்கிறார். இவர் பொது சேவைகள் துறை அமைச்சராக இருந்தபோதுதான் COVID-19 தொற்று பாதிப்பு கனடாவில் தீவிரம் எடுத்தது.
இதனை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கவும் தேவையான ஆக்ஸிஜன், பிபிஇ கிட், தடுப்பூசி விநியோகம் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்திருந்தார். இவரது நடவடிக்கைகள் அந்த நேரத்தில் பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தன. எனவே இந்த மக்கள் செல்வாக்கு இவரை பிரதமராக தேர்ந்தெடுக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
அனிதா ஆனந்தின் முக்கிய முயற்சிகள்:
கோவிட் தவிர, வேறு சில நடவடிக்கைகளும் அனிதாவின் பெயரை பிரலமாக்கியது. குறிப்பாக பாதுகாப்பு துறை அமைச்சாராக அவர் இருந்தபோது, கனடா ராணுவத்தில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அதிரடியான நடவடிக்கையை எடுத்திருந்தார். ராணுவம், போலீஸ் மற்றும் இதர சீருடை பணிகளில் பதிவாகும் பாலியல் வழக்குகளை உடனடியாக விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அனிதா முயற்சி எடுத்திருந்தார். அதேபோல, கருவூலத் துறையில் பணியமர்த்தப்பட்டபோது, நிதி விவகாரங்களில் வெளிப்படை தன்மைக்காக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
பாரிஸ் மாநாட்டின் தீர்மானத்தை அமல்படுத்திய அனிதா:
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பமயமாதல் பிரச்சனையை சமாளிக்க, வளர்ந்த நாடுகள் பசுமை எரிசக்தியை பயன்படுத்த வேண்டும் என்று பாரிஸ் மாநட்டில் தீர்மானம் போடப்பட்டது. இதில் கனடாவுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் அமெரிக்கா இதனை பின்பற்றவில்லை. ஆனால் கனடா இதை செய்து காட்டியது. இதற்கு பின்னால் இருந்தவர் அனிதாதான்.
அதாவது இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, கனடா முழுவதும் சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு சிறப்பாக வகுத்திருந்தார். இதன் மூலம் கனடாவில் பசுமை எரிசக்தி பயன்பாடு அதிகரித்தது. ஆக இந்த செல்வாக்கு எல்லாம் அனிதாவுக்கு பிரதமர் பதவி கிடைக்க வழி வகுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1960களில் தமிழ்நாட்டிலிருந்து சரோஜ் டி ராம் மற்றும் எஸ்.வி. ஆனந்த் ஆகியோர் கனடாவுக்கு புலம் பெயர்ந்திருந்தனர். இவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.












Click it and Unblock the Notifications