ஆடிப்போன ஈரான்! அசந்த நேரம் பார்த்து அடித்த இஸ்ரேல்! "சைபர் தாக்குதல்.." எந்த இடங்கள் டார்கெட்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே திடீரென இப்போது ஈரான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய சைபர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையம் தொடங்கிப் பல முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் இப்போது மிக மோசமான நிலையே நிலவுகிறது. கடந்தாண்டு அக். மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலால் இந்த மோதல் தொடங்கியது. அதன் பிறகு ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு: ஹமாஸ் மீதான தாக்குதலைக் கண்டித்து ஹிஸ்புல்லா உள்ளே வந்தது. இதையடுத்து ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாகக் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா என்பது ஈரான் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பாகும். இதனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானை ஆத்திரப்படுத்தியது.
ஈரானும் இப்போது இந்த மோதலில் குதித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் பெரியளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும், இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று இஸ்ரேல் கூறியிருந்த நிலையில், இப்போது ஈரான் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது.
ஈரானை திக்கி திணறவைத்த இஸ்ரேல்.. நாடு முழுக்க சைபர் அட்டாக்.. அணு உலைகளுக்கும் குறி.. பதற்றம்
எவை டார்கெட்: இதற்கிடையே இந்தத் தாக்குதல் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஈரான் மீதான சைபர் தாக்குதல்களை இஸ்ரேலின் பிரதான இலக்குகள் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டே இஸ்ரேல் இந்த சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக ஈரானின் உச்ச கவுன்சில் ஆஃப் சைபர்ஸ்பேஸின் முன்னாள் செயலாளர் ஃபிரூசாபாடி கூறுகையில், "ஈரான் அரசின் மூன்று முக்கிய அமைப்புகளான நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என்று மூன்றுமே மிக மோசமான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல முக்கிய தகவல்களும் திருடப்பட்டுள்ளன
அணுசக்தி மையங்கள்: குறிப்பாக எங்கள் அணுசக்தி மையங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. எரிபொருள் விநியோக உள்கட்டமைப்பு, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து நெட்வொர்க், துறைமுகங்கள் எனப் பலவற்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளன. சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட சில துறைகள் பற்றி மட்டுமே நான் சொல்கிறேன். இன்னும் பல அமைப்புகள் மீதும் சைபர் தாக்குதல் நடந்துள்ளது" என்றார்.
ஈரானை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பெரிய சைபர் தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது. இது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இப்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும், முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும் போது பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த சைபர் தாக்குதல் அங்கு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் வெடித்தால் இது சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் நிலையில், நிலைமை தொடர்ந்து மோசமடைவது அனைவருக்கும் கவலையையே ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications