குறிவைக்கப்படும் அமெரிக்கா? முதலில் ஹமாஸ், அடுத்து இப்போ ஹிஸ்புல்லா! இஸ்ரேல் போரில் பகீர் திருப்பம்
பெய்ரூத்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது அந்த பிராந்தியத்தில் இருக்கும் குழுக்கள் அனைத்தும் அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். காசா மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், விரைவில் முழு வீச்சிலும் படையெடுப்பை நடத்த உள்ளது.

இதற்கிடையே ஹமாஸ் முக்கிய தளபதிகளில் ஒருவரான அலி பராக்கா நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். சோவியத் ஒன்றியம் எப்படி அழிந்து போனதோ அதேபோல அமெரிக்காவும் அழிக்கப்படும் என்று கூறி அவர் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
ஹிஸ்புல்லா: இப்போது ஹிஸ்புல்லா அமைப்பும் அமெரிக்கா பக்கம் திரும்பியுள்ளது. காசா மீது இப்போது நடந்து வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் முழு காரணம் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார். மேலும், காசா மீதான தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான நடக்கும் சண்டை என்பது பிராந்திய மோதலாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை ஆரம்பித்தது முதலே அவ்வப்போது லெபானான் எல்லையில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்து வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா முதல்முறையாக வெளிப்படையாகக் கருத்து கூறியுள்ளார்.
அமெரிக்கா தான் காரணம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காசா மற்றும் அதன் மக்கள் மீது நடந்து வரும் போருக்கு அமெரிக்காவே முழு காரணம். இஸ்ரேல் வெறுமனே அழிவை ஏற்படுத்தும் கருவி. நாம் காரணத்தைத் தான் சரி செய்ய வேண்டும். இந்த மோதல் இப்போது மிகவும் தீவிரமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இது நிச்சயம் ஒரு பிராந்திய போராக மாறும் அபாயம் இருக்கவே செய்கிறது" என்றார்.
எதிர்கொள்ள தயார்: இஸ்ரேல் ஹமாஸ் சண்டை ஆரம்பித்தது முதலே லெபானானின் இருந்து ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதனால் இந்த கிழக்கு மத்திய தரைக் கடலுக்கும் அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்பியது. இது தொடர்பாகப் பேசிய நஸ்ரல்லா, "நீங்கள் மத்திய தரைக்கடலில் உங்கள் கடற்படை கப்பல்களை அனுப்பி எங்களை அச்சுறுத்த முடியாது. உங்களை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இப்பகுதியில் போர் நடந்தால், உங்கள் கடற்படையால் எந்தப் பயனும் இருக்காது. உங்கள் விமானங்களும் போரில் எதையும் செய்ய முடியாது. இது உங்களுக்கே (அமெரிக்கா) நன்றாகத் தெரியும். அப்படி பிராந்தியம் முழுக்க சண்டை ஏற்பட்டால் நீங்கள் தான் முதலில் விலை கொடுக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
கண்காணிக்கிறோம்: லெபானான் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து நஸ்ரல்லா பேசுகையில், "லெபனான் விவகாரத்தைப் பொறுத்தவரை நாங்கள் அனைத்து ஆப்ஷன் குறித்தும் ஆலோசித்தே வருகிறோம். காசாவில் என்ன நடக்கிறதோ.. அதைப் பொறுத்தே லெபானான் எல்லையில் நடக்கும் சம்பவங்கள் இருக்கும். இஸ்ரேல் ராணுவ செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்தே வருகிறோம்.
இந்தப் பகுதியில் பிராந்திய மோதல் ஏற்பட வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. லெபானான் தாக்கி அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யலாம் என்று எந்தவொரு நாடு நினைத்தாலும், அது முட்டாள்தனமான முடிவாகவே இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications