விமானத்தில் ஆள் கடத்தல்? பெரும் சிக்கலில் 300+ இந்தியர்கள்.. உண்மையில் என்ன நடந்தது? பகீர் பின்னணி
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் ஆள் கடத்தல் நடந்ததாகச் சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியர்கள் சென்ற விமானத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இது குறித்து சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆள் கடத்தல் நடந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 300+ இந்தியர்கள் இருந்த விமானத்தைத் தரையிறக்கிய பிரான்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறுவர், சிறுமி உள்ளிட்ட பலரும் பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

துபாயில் இருந்து நிகரகுவா நோக்கிச் சென்ற விமானத்தில் 303 பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். பாரீஸுக்கு அருகிலுள்ள வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் நேற்று சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.
விமானம்: இந்த விமானத்தில் ஆள் கடத்தல் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இரண்டு பேரை பிரான்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கை பிரான்ஸ் நீதிபதி இன்று விசாரிக்கிறார். அவரால் அதிகபட்சம் 8 நாட்கள் வரை இந்த பயணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியும்.
பிரான்ஸ் விதிகளின்படி வெளிநாட்டுக் குடிமகன்களை அந்நாட்டு போலீசாரால் நான்கு நாட்கள் வரை காவலில் வைக்க முடியும். அந்நாட்டின் நீதிபதி ஒப்புதலுடன் மேலும் அதை 8 நாட்கள் நீட்டிக்க முடியும். அதன் பிறகும் நீதிபதி முன் ஆஜர் செய்து இதை நீட்டிக்க முடியும். அதிகபட்சமாக 26 நாட்கள் வரை ஒருவரைத் தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.
இந்தியத் தூதரகம்: அதேநேரம் பிரான்ஸ் அதிகாரிகள் விமானத்தில் விசாரணையை நடத்த ஆரம்பிக்கும் முன்பு இது தொடர்பாக இந்தியத் தூதரகம் உரிய அனுமதி பெற்றதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும், நிலைமையை ஆராய்ந்து வரும் இந்தியத் தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கும் விரைந்துள்ளனர். அங்கே இந்தியர்களுக்கு உதவி தேவைப்படும்பட்சத்தில் அதைச் செய்யத் தயாராக உள்ளதாகக் கூறுகின்றனர்.
விமானத்தில் இருந்த பயணிகளில் குறைந்து 10 பேர் அகதிகளாக இருக்க விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவிர ஆறு சிறார்களும் புகலிடம் கோரி விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் பெரியவர்கள் துணையில்லாமல் 11 சிறார்கள் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.
சிக்கித் தவிக்கும் பயணிகளுக்குத் தற்காலிக படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வத்ரி விமான நிலையத்தில் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடரும் விசாரணை: கிழக்கு பிரான்சில் உள்ள வத்ரி நகரம் என்பது பாரீஸிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இந்த ஏர் பஸ் ஏ340 லெஜண்ட் ஏர்லைன்ஸ் என்ற ரோமானிய நிறுவனத்திற்குச் சொந்தமானது. விமானத்தில் இருந்த சிலர் கடத்தப்பட்டவர்கள் என்ற ரகசியத் தகவல் பிரானஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த நிலையில், அதைத் தொடர்ந்தே அவர்கள் இந்த விமானத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தடுப்புக் காவல்: விடிய விடிய விசாரணை நடந்த நிலையில், இரண்டு பேரை போலீசார் தடுப்பு காவலில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இல்லை. பிரான்ஸ் நாட்டின் சட்டப்படி ஆள் கடத்தல் விவகாரத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமான நிலையம் இதில் எந்தவொரு தவறும் நடக்கவில்லை என்றும் போலீசார் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications