பூமிக்கு அடியில் சொகுசு பங்களாக்கள்.. வாயை பிளக்க வைக்கும் வினோத கிராமம்.. காரணத்தை கேட்டால் ஷாக்
பெய்ஜிங்: உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல வடிவங்களில் வீடுகள் இருக்கும். ஆனால், சீனாவில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ரொம்பவே வித்தியாசமான முறையில் வீடுகள் உள்ளன. அதாவது இந்த பகுதியில் ஒட்டுமொத்த மக்களும் நிலத்திற்கு அடியில் வசித்து வருகிறார்களாம். அவர்கள் வீடுகளே நிலத்திற்கு அடியில் தான் இருக்கிறதாம். ஏன் இப்படி வசிக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
சீனா பல வினோதங்களுக்குப் பெயர் போனது. நாம் யோசித்துக் கூட பார்க்காத பல விஷயங்கள் சீனாவில் இருக்கும். அப்படி தான் சீனாவில் ஒரு பகுதியில் பொதுமக்கள் இன்னுமே நிலத்திற்கு அடியில் வசித்து வருகிறார்களாம். அவர்கள் ஏன் இதுபோல நிலத்திற்கு அடியில் வசிக்கிறார்கள் என்ற காரணம் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

யாவோடாங்குகள்
சீனாவில் உள்ள லோஸ் பீடபூமியில் தான் மக்கள் இதுபோல பூமிக்கு அடியில் வசித்து வருகிறார்கள். யாவோடாங்குகள் என்று அழைக்கப்படும் இந்த குகை வீடுகள் சுமார் 2000 முதல் 4000 ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. இது சீன கட்டிடக்கலையின் ஒரு சிறப்பம்சமாகத் திகழ்கின்றன. இப்போது நவீன கட்டுமானங்கள் வந்துவிட்டாலும் கூட அங்கு சுமார் 40 மில்லியன் பேர் இந்த வீடுகளில் தான் வசித்து வருகிறார்களாம். அங்குள்ள ஷான்ஷி, ஷான்சி, கான்சு மற்றும் ஹெனான் மாகாணங்களில் இதுபோன்ற வீடுகளை அதிகம் பார்க்க முடியும்.
லோஸ் பீடபூமி
குறிப்பாக லோஸ் பீடபூமி அமைந்துள்ள பகுதிகளிலேயே இந்த வீடுகள் அதிகம் இருக்கும். அந்த பகுதியில் மண் மென்மையாகவும் எளிதில் செதுக்கக்கூடிய வகையிலும் இருக்கும். இதன் காரணமாக அந்த குறிப்பிட்ட பகுதியில் நிலத்திற்கு அடியில் வீடுகள் அதிகம் இருக்கிறது.
நிலப்பரப்பைப் பொறுத்து யாவோடாங்குகள் மூன்று வடிவங்களில் காணப்படுகின்றன. மலை பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் பல மாடிகளைக் கொண்டிருக்கும். மறுபுறம் சமவெளிகளில் கட்டப்படுபவை எட்டு மீட்டர் ஆழம் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டைத் தவிர சில சமயங்களில் செங்கற்கள் அல்லது கற்களைப் பயன்படுத்தி வளைவான அறைகள் கட்டியும் வீடுகளை உருவாக்குவார்கள்.
பாரம்பரியம்
சியாதோங் வம்சத்தின் (கிமு 2100-1600) போது தான் இந்த யாவோடாங்குகள் தோன்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடக்கத்தில் கிட்டத்தட்டக் குகைகள் போலவே இருந்த நிலையில், பல நூற்றாண்டுகளாக அதன் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது புகைபோக்கி உடன் கூடிய சமையலறை, பெட் ரூம், பாத் ரூம் என சகல வசதிகளையும் கொண்டதாக யாவோடாங் வீடுகள் உள்ளன.
இது தொடர்பாக வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழக கட்டிடக்கலைஞர் டேவிட் வாங் கூறுகையில், "குகை அமைப்பைப் போலவே இந்த வீடுகள் இருக்கும். இது மனிதர்களின் ஆரம்பக்கால கட்டிடக்கலை வடிவங்களில் ஒன்றாகும்... 2000 ஆண்டுகளுக்கும் மேலாக அது சீனாவில் தொடர்ந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்!
இந்த யாவோடாங்குகளின் தனித்துவமே அதன் வடிவமைப்பு தான். இவை உள்ளூரில் கிடைக்கும் லோஸ் மண்ணால் மட்டுமே கட்டப்படுகிறது. இதனால் , வழக்கமான வீடுகளை விட குறைவான பொருட்களையே இது பயன்படுத்துகின்றன. இதனால் செலவும் குறைவு.! மேலும், அடர்த்தியான மண் சுவர்கள் இயற்கையாகவே வெப்பநிலையைச் சீராக்குகின்றன.. அதாவது கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வீட்டை இயற்கையாகவே சூடாக்கும்!
ஒரே சிக்கல்
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் கூட இதிலும் சில பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக யாவோடாங்குகள் இயற்கை பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. 1556ல் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இங்கு வசித்த சுமார் 8 லட்சம் பேர் உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகள் மிக மோசமாக இருக்கும். அதேபோல அந்த பகுதியில் இப்போது மண் அரிப்பு பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், பல குகைகள் இடிந்து விழுந்தன.












Click it and Unblock the Notifications