மோடி உடனான சந்திப்பு! டெல்லியில் இருந்து வியட்நாம் பறந்த பைடன்! அங்கே என்ன சொன்னார்! முக்கியம் ஆச்சே
ஹனோய்: டெல்லியில் இருந்து வியட்நாம் சென்ற அமெரிக்க அதிபர் பைடன். பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்,
டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் பல முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கடந்த சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

முன்னதாக டெல்லி வந்த அதிபர் பைடன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். பொதுவாக அமெரிக்க அதிபர் இதுபோன்ற முக்கிய தலைவர்களைச் சந்தித்தால்.. இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். ஆனால், இந்த முறை அப்படி இல்லாமல், கூட்டறிக்கை ஒன்று மட்டுமே வெளியிடப்பட்டது.
பைடன்: இதற்கிடையே உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்ட பைடன் வியட்நாம் சென்றுள்ளார். அங்கே செய்தியாளர்களைச் சந்தித்த பைடன், டெல்லியில் மோடியுடன் நடந்த மீட்டிங் குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, மனித உரிமைகள் பிரச்சினை, பத்திரிக்கை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "நான் எப்போதும் செய்வது போல், மனித உரிமைகள் விவகாரம், சிவில் சமூகத்தின் தேவை, மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்துப் பேசினேன்.. ஒரு வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப இவை அனைத்தும் முக்கியம் என்பதை நான் தெரிவித்தேன்.. நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் சாடல்: ஜோ பைடனின் இந்த கருத்துகளைக் காங்கிரஸ் இப்போது கையில் எடுத்துள்ளது. காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்துக் கூறுகையில், "நானும் பிரஸ் மீட் வைக்க மாட்டேன்.. உங்களையும் வைக்க விட மாட்டேன் என்று மோடி பைடனிடம் கூறியிருப்பார்.. பைடன் மோடியிடம் சொன்னதையே மீண்டும் வியட்நாம் சென்று சொல்லியுள்ளார். மனித உரிமை, சிவில் சமூகத்தின் தேவை மற்றும் பத்திரிகை சுதந்திரம் முக்கியம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாகவும் கூட ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசை கடுமையாகச் சாடியிருந்தார். அதாவது இரு தரப்பு கூட்டத்திற்குப் பிறகு பைடன் தரப்பு செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பியதாகவும் இருப்பினும், அதற்கு மோடி அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியிருந்தார். மோடி ஸ்டைலில் ஜனநாயகம் இப்படி தான் செயல்படுகிறது என்றும் அவர் கடுமையாகச் சாடியது குறிப்பிடத்தக்கது.

பைடன் என்ன சொன்னார்: தொடர்ந்து வியட்நாமில் பேசிய அதிபர் பைடன், "இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தினேன்.. மேலும், டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியதற்கும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை ஆழப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்.
ஜி20 உச்சி மாநாட்டில் பல முக்கிய விஷயங்களைச் செய்துள்ளோம்.. சர்வதேச பிரச்சினைகள் மற்றும் முக்கிய சவால்களைத் தீர்க்க அமெரிக்காவின் பங்களிப்பைக் காட்டவும் இந்த நிகழ்வு உதவி இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியில் முதலீடு செய்வது.. காலநிலை நெருக்கடியைச் சரி செய்வது.. உலகெங்கும் சுகாதாரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவற்றில் அனைவரது பங்களிப்பும் முக்கியம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications