கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்கள் யார்.. அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன! பரபர தகவல்
கத்தார்: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 8 இந்தியர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யார்.. என்ன குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கத்தார் நாட்டில் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ராயல் ஓமானி விமானப் படையில் வேலை செய்ய முன்னாள் வீரருக்குச் சொந்தமானதாகும்.

இந்த நிறுவனம்தான் கத்தார் ஆயுதப் படைகளுக்குப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதில் பணிபுரிந்து 8 இந்தியர்கள் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை உளவு பார்த்து இஸ்ரேலுக்கு அளித்தாகப் புகார் எழுந்தது.
மரண தண்டனை: இது தொடர்பான வழக்கில் கத்தார் நீதிமன்றம் அந்த எட்டு முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த இந்தியா, இது வழக்கில் அனைத்து சட்ட வழிகளும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறியுள்ளது.. உளவு பார்த்ததாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த எட்டு இந்தியர்களும் இப்போது அங்கே தனிமைச் சிறையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் கத்தாரில் என்ன நடந்தது.. கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
யார் இவர்கள்: கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கத்தாரில் 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சௌரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் சைலர் ரேகேஷ் கோபாகுமார் ஆகிய 8 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர் அனைவரும் இந்தியக் கடற்படையில் 20 ஆண்டுகள் வரை சிறப்பான சேவை செய்து சாதனை படைத்தவர்கள் ஆகும். மேலும், இவர்கள் இந்தியக் கடற்படையில் முக்கிய பதவிகளிலும் இருந்தவர்கள். குறிப்பாக கமாண்டர் பூர்ணேந்து திவாரிக்கு வெளிநாட்டு இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருது கடந்த 2019இல் வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தியதற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
கைது: இந்த எட்டு இந்தியர்களும் கத்தாரின் ஆயுதப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இது ராயல் ஓமன் விமானப்படையின் ஓய்வுபெற்ற படைத் தலைவர் காமிஸ் அல்-அஜ்மிக்கு சொந்தமானதாகும்.. அல் அஜ்மியும் கடந்த ஆண்டு இந்தியர்களுடன் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் கடந்தாண்டு நவ. மாதம் விடுவிக்கப்பட்டார்.
இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களில் சிலர் அதிமுக்கிய திட்டத்தில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக எதிரிகள் கண்களில் மையைத் தூவிக் கொண்டு செல்லும் இத்தாலி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் திட்டத்தில் வேலை செய்தவர்கள் ஆவர். இந்தச் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து தோஹாவில் இருந்த அல் தஹ்ரா குளோபல் பயிற்சி நிறுவனம் மூடப்பட்டது. அங்கு இந்தியர்கள் நாடு திரும்பிவிட்டனர்.
கைது நடவடிக்கை: இந்த 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களும் கடந்த , 2022 ஆகஸ்ட் 30ஆம் தேதி கத்தாரின் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து கத்தார் அதிகாரிகளோ இந்தியாவோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், உளவு பார்த்த குற்றச்சாட்டில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 25ஆம் தேதி எட்டு இந்தியக் கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கத்தார் நாட்டின் சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஜாமின் பெற பல நடவடிக்கைகள் எடுத்த போதிலும், அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் தான் 8 பேருக்கும் மரண தண்டனையை விதிப்பதாக கத்தார் நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள இந்தியா, தனது குடிமக்களை மீட்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications