"முன்னாள் கேஜிபி உளவாளி!" ரஷ்யாவில் திடீரென அதிகாரத்திற்கு வரும் நிகோலாய் பட்ருஷேவ்? என்னாச்சு
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் கேன்சர் ஆப்ரேஷன் செய்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் இல்லாத நேரத்தில் யார் அதிகாரத்தில் இருப்பார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் தொடங்கிய போர் இன்னும் கூட முழுமையாக முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நகரின் சில குறிப்பிட்ட பகுதிகளைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இது தொடங்கிய போது, யாரும் இந்தப் போர் இவ்வளவு காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கவில்லை. போர் தொடங்கிய சில நாட்களிலேயே ஒட்டுமொத்த உக்ரைன் நாட்டை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்றே பலரும் கருதினர்.

உக்ரைன் போர்
இருப்பினும், அதற்கு நேர் மாறாக உக்ரைன் ராணுவம் துணிச்சலாக ரஷ்ய வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. இதன் காரணமாகவே இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கூட உக்ரைனைத் ரஷ்யாவால் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இதனால் ரஷ்ய அதிபர் புதின் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இப்போது கேன்சர் ஆப்ரேஷனை செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதினுக்கு ஆப்ரேஷன் நடக்கும் நேரத்தில் நிகோலாய் பட்ருஷேவ் என்பவரிடம் அனைத்து அதிகாரங்களும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதின் முடிவு
புதின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக அறியப்படுவர் நிகோலாய் பட்ருஷேவ். தற்போது ஹார்ட் லைன் பாதுகாப்பு கவுன்சில் தலைவராக உள்ள நிகோலாய் பட்ருஷேவ் தான், முன்பு சோவியத் காலத்து உளவு அமைப்பான KGB அமைப்பில் கவுன்டர் உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர். உக்ரைன் போரிலும் கூட நிகோலாய் பட்ருஷேவ் குறிப்பிட்ட அளவுக்கு ஆலோசனை அளித்துள்ளதாக ரஷ்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2 மணி நேர தீவிர ஆலோசனைக்குப் பின்னரே, நிகோலாய் பட்ருஷேவ்வுக்கு தற்காலிகமாக அதிகாரத்தை கொடுக்க புதின் முடிவு எடுத்துள்ளார்.

பிரதமருக்கு நோ
ரஷ்ய அதிகார அமைப்பில் இருக்கும் ஒரே உண்மையான நம்பகமான நபர் மற்றும் நண்பராக நிகோலாய் பட்ருஷேவ்வை புதின் கருதுகிறார். இதன் காரணமாகவே அதிகாரத்தை 56 வயதான பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டினுக்கு கொடுப்பதற்குப் பதிலாக பட்ருஷேவ்வுக்கு அளித்தார். ரஷ்ய பிரதமராக உள்ள மைக்கேல் மிஷுஸ்டினுக்கு கடந்த காலத்தில் ராணுவ அல்லது உளவு அமைப்பில் அனுபவம் இல்லாத காரணத்தினாலேயே அவருக்கு அதிகாரத்தை புதின் கொடுக்கவில்லை என்றும் கூற முடிகிறது.

யார் இந்த நிகோலாய் பட்ருஷேவ்
கடந்த 1951ஆம் ஆண்டில் பிறந்த நிகோலாய் பட்ருஷேவ், வலுவான ராணுவ பின்னணியைக் கொண்டவர். அவரது பெற்றோர் நாஜி படையெடுப்பில் இருந்து தப்பினர். இருப்பினும், அதுவரை சம்பாதித்த அனைத்தையும் அந்த ஒரே நிகழ்வில் இழந்தனர். இதையடுத்து அவரது குடும்பம் லெனின்கிராட் (இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்) க்கு குடிபெயர்ந்தது. நிகோலாய் பட்ருஷேவ் சோவியத் கடற்படையில் அதிகாரியாகப் பணி புரிந்தவர்.

யார் இவர்
லெனின்கிராட் நகரில் இருந்த சோவியத் காலத்து உளவு அமைப்பான கேஜிபி-இல் பாதுகாப்பு அதிகாரியான நிகோலாய் பட்ருஷேவ், கடத்தல் எதிர்ப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆப்ரேஷன்களில் சிறப்பாக பணியாற்றிப் பெயர் பெற்றார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்த பின்னரும் கூட, அவர் பாதுகாப்புத் துறையில் தொடர்ந்து பணியாற்றினார். 1992 முதல் 1994 வரை கரேலியா குடியரசின் பாதுகாப்பு அமைச்சராகவும் அவர் இருந்தார். பின்னர், மாஸ்கோவில் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக ஆனார்.

ரஷ்ய ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ்
ரஷ்ய ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸில் நீண்ட அனுபவம் கொண்டவர் நிகோலாய் பட்ருஷேவ். 1999 முதல் 2008ஆம் ஆண்டு வரை ரஷ்ய ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் இயக்குநராக நிகோலாய் பட்ருஷேவ் இருந்தார். அதன் பின்னர், 2008ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக பட்ருஷேவ் பணியாற்றி வருகிறார். சோவியத் காலத்தில் முக்கிய உளவு அமைப்பாக இருந்த KGBஇன் முக்கிய தொடர்ச்சியாக இந்த FSB கருதப்படுகிறது.

டிக் அடித்த புதின்
உக்ரைன் போர் இன்னும் முடியாத நிலையில், இப்போது ஆப்ரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் புதின் உள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் அதிகாரத்தை விட்டுச் செல்ல புதின் விரும்புகிறார். இதன் காரணமாகவே ரஷ்ய பாதுகாப்புப் படை மற்றும் உளவுப் பிரிவுகளில் நீண்ட அனுபவம் கொண்ட தனது நம்பிக்கைக்குரிய நிகோலாய் பட்ருஷேவ்வை புதின் டிக் அடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications