துருக்கியை எந்த நாடும் நம்புவதில்லை.. ஆனால், எல்லா நாடும் உறவு வைக்க ஓடுகிறது! ஏன் தெரியுமா?
இஸ்தான்புல்: அமெரிக்கா அடங்கிய நேட்டோ நாடுகளில் துருக்கியும் ஒன்று. ஆனால் ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை அமைப்பை, துருக்கியால் ஈஸியாக வாங்க முடிகிறது. இன்னொரு பக்கம், ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குகிறது. அமெரிக்காவுக்கும் அது உண்மையாக இல்லை. சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் கடுப்பை ஏற்படுத்துகிறது. இதுதான் துருக்கி. எல்லோரும் எதிர்க்காத.. ஆனால் எரிச்சலோடு உறவையும் பேண விரும்பும் ஒரு நாடு.
இந்தியா-துருக்கி உறவின் ஆரம்பம்
1947-க்குப் பிறகு இந்தியாவுக்கும் துருக்கிக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு இல்லாமல் இருந்தது. இந்தியா அணி சேரா நாடுகள் பக்கம் நின்றபோது, துருக்கி அமெரிக்காவுடன் கூட்டணி அமைத்தது. 1980-களில் ஜனாதிபதி டர்குட் ஓசல், இந்தியாவோடு உறவை வலுப்படுத்த முயற்சி எடுத்தார். இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய உறவுக்கான ஆரம்பம் அது.
1989-ல் துருக்கிக்கு இந்திய தூதராக அனுப்பப்பட்ட கன்வால் சிபல், அப்போதைய நீதிக்கட்சித் தலைவர் நெக்மெட்டின் எர்பகானுடன் காஷ்மீர் நிலவரம் குறித்து தொடர்ந்து உரையாடி வந்தார். காஷ்மீர் குறித்து, அப்போதைய அந்த நாட்டு ஊடகங்கள், இந்தியாவுக்கு எதிராக எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எர்டோகன் மற்றும் அப்துல்லா குல் இருவரும் எர்பகானின் கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்துல்லா குல் பின்னர் துருக்கியின் அதிபரானார். அவர் 2010-ல் இந்தியாவுக்கும் வருகை தந்தார்.

பிரதமர் மோடியும் எர்டோகனுடன் நல்லுறவை பேண முயற்சி செய்தார். எர்டோகன் 2008 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ளார். 2015-ல் நடந்த ஜி-20 மாநாட்டில் மோடி கலந்துகொண்டார்.
துருக்கி உறவில் விரிசல்
2019-ல் ஐ.நா. பொதுச் சபையில், காஷ்மீருக்கான பிரிவு 370 குறித்த இந்தியாவின் நடவடிக்கையை எர்டோகன் விமர்சித்ததில் இருந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைந்தது. இதன் விளைவாக, மோடியின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டது. 2020-ல் துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்தபோது, காஷ்மீரில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது.
இருப்பினும், 2022-ல் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி மற்றும் எர்டோகன் சந்தித்து பேசினர். 2023-ல் டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் எர்டோகன் கலந்து கொண்டார். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சிவில் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
துருக்கியின் தொடர்ச்சியான தொல்லை பேச்சுக்கள் இருந்தபோதிலும், இந்தியா ஒரு ஆக்கபூர்வமான அணுகுமுறையை பின்பற்றியதற்கு பல காரணங்கள் உள்ளன. மேற்கு ஆசியாவில் இந்தியாவுக்கு இருக்கும் முக்கியமான நலன்களை கருத்தில் கொண்டு, பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடனும், இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று இந்தியா கருதுகிறது.
எர்டோகன் தலைமையிலான துருக்கி
எர்டோகன் தலைமையிலான துருக்கி, மேற்கு ஆசியாவில் ஒரு தீவிர கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. மத்திய ஆசியாவில் உள்ள துருக்கிய குடியரசுகளிலும் துருக்கிக்கு செல்வாக்கு உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் "ஆசியாவின் இதயம்" என்ற முயற்சியின் மூலம், துருக்கி தனது செல்வாக்கை இந்திய எல்லை வரை விரிவுபடுத்த முயல்கிறது. இந்த விவாதங்களில் இந்தியாவும் ஒரு பகுதியாக அழைக்கப்பட்டது.

துருக்கி, கருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நாடாக உள்ளது. போஸ்பரஸ் ஜலசந்தியின் மீது துருக்கிக்கு இருக்கும் கட்டுப்பாடு ரஷ்யாவுக்கு சாதகமாக உள்ளது. ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மத்திய தரைக்கடலுக்கு செல்ல இந்த ஜலசந்தியை பயன்படுத்த வேண்டும். உக்ரைனுக்கும் போஸ்பரஸ் ஜலசந்தி ஒரு முக்கியமான வர்த்தக பாதையாகும்.
துருக்கி நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்தபோதும், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மீறி, துருக்கி உதவி செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் எரிசக்தி உறவுகள் முக்கியமானவை. சிரியாவில் ரஷ்யாவின் நலன்களுக்கு எதிராக துருக்கி செயல்பட்டாலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கினாலும், ரஷ்யா-உக்ரைன் போரில் தன்னை ஒரு மத்தியஸ்தராக நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது.
துருக்கியின் வினோத ராஜதந்திரம்
துருக்கியின் ராஜதந்திரம் ஒரு "சந்தை" போன்ற அணுகுமுறையை கொண்டுள்ளது. இதை பஜார் வியூகம் என்கிறார்கள். இந்த சந்தையை பயன்படுத்துகின்றன பிற நாடுகள். எந்த நாடும் துருக்கியை முழுமையாக நம்புவதில்லை. ஆனால், எல்லோரும் துருக்கியுடன் உறவு வைத்துக்கொள்கிறார்கள்.
துருக்கி நேட்டோ உறுப்பினர் என்றாலும், அமெரிக்காவை மீறி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.அதேநேரம், சிரியாவில் குர்துகளுக்கு எதிராகவும், ரஷ்யாவுக்கு எதிராகவும் துருக்கி செயல்படுகிறது.
சிரியாவின் அகதிகளை ஐரோப்பாவில் அனுமதிப்பதாக மிரட்டி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கணிசமான நிதியை துருக்கி பெற்றுள்ளது. இஸ்ரேலுடன் அவ்வப்போது முரண்படுகிறது. எனவே, துருக்கியின் மீது செல்வாக்கு செலுத்துவது இந்தியாவுக்கு எளிதான காரியம் அல்ல.
துருக்கி-பாகிஸ்தான் உறவு
துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளாக வலுவாக உள்ளது. கிலாஃபத் இயக்கத்தின்போது, இந்தியர்கள் முஸ்தபா கெமால் அட்டாடர்க் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பணம் மற்றும் தங்கத்தை நன்கொடையாக அளித்தனர். ஆனால், இன்று அந்த ஆதரவின் பலனை பாகிஸ்தான் அனுபவித்து வருகிறது. துருக்கியும் பாகிஸ்தானும் பாக்தாத் ஒப்பந்தம் மற்றும் மத்திய ஒப்பந்த அமைப்பு (CENTO) போன்ற அமெரிக்க கூட்டணி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருந்தன. இரு நாடுகளும் ஈரான் உடன் சேர்ந்து பிராந்திய ஒத்துழைப்பு மேம்பாட்டுக்கான (RCD) ஒரு பகுதியாகவும் இருந்தன.

தாங்கள் தனிமைப்படுத்தப்படும்போது பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவுக்கு துருக்கி நன்றி தெரிவிக்கிறது. வடக்கு சைப்ரஸை ஆக்கிரமித்ததற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததை துருக்கி நினைவுகூர்கிறது. அதற்கு கைமாறாக பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது அரசியல் மற்றும் தார்மீக கடமை என்றும், அதை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடாக பார்க்கக் கூடாது என்றும் துருக்கி கூறுகிறது.
காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி இரட்டை வேடம் போடுகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) காஷ்மீர் தொடர்பு குழுவின் தலைவராக, காஷ்மீரில் சுயநிர்ணய உரிமையை துருக்கி ஆதரிக்கிறது. மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியா மீது குற்றம் சாட்டுகிறது. காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்ப துருக்கி ஊடகங்கள் உதவுகின்றன.
எர்டோகன் மட்டுமே ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து எழுப்பி வருகிறார். காஷ்மீரில் உள்ள தனது "சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்" குறித்து அவர் கவலைப்படுவதாக கூறி இஸ்லாமிய சாயத்தை பூசுகிறார். 2024-ல் எர்டோகன் ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் குறித்து பேசவில்லை. ஏனெனில், பிரிக்ஸ் அமைப்பில் சேர இந்தியாவின் ஆதரவை அவர் நாடினார்.
இந்தியாவும் துருக்கியும்
துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ உறவுகள் உள்ளன. துருக்கி நேட்டோ உறுப்பு நாடு என்பதால், அந்த அமைப்பின் மேம்பட்ட ராணுவ தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. துருக்கி எஃப்-16 போர் விமானங்களை உற்பத்தி செய்கிறது. பாகிஸ்தானும் துருக்கியின் உதவியுடன் தனது எஃப்-16 விமானங்களை மேம்படுத்த முடியும். இதுதவிர, கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் துருக்கி சிறந்து விளங்குகிறது. இந்திய கடற்படைக்காக 5 கடற்படை ஆதரவு கப்பல்களை (FSS) கட்டுவதற்கு துருக்கிய Anadolu Shipyard உடன் இந்தியா 2.2 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரலில் ரத்து செய்யப்பட்டது.

இந்திய விமான நிலையங்களில் தரைக்கட்டுப்பாடு, சரக்கு மற்றும் கிடங்கு சேவைகளை வழங்கி வந்த Celebi Aviation நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா ரத்து செய்தது. இதனால் அதிருப்தியடைந்த துருக்கி நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கும் அளவுக்கு இந்தியர்களின் மனநிலை தற்போது மாறியுள்ளது.
இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள்
ஜம்மு & காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி தொடர்ந்து தலையிட்டால், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு பல வழிகள் உள்ளன. வடக்கு சைப்ரஸை துருக்கி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. குர்து சிறுபான்மையினருக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறி ஈராக்கில் குர்து மக்கள் மீது அவ்வப்போது குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. சிரியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சிரியாவின் இறையாண்மையை மீறுகிறது. கிரீஸ் உடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறது. அஜர்பைஜான்-ஆர்மீனியா மோதலில் தலையிட்டுள்ளது. ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் விரிவாக்க அபிலாஷைகள் அரபு நாடுகளுக்கு கவலையை அளிக்கிறது.
இந்தியா நினைத்தால், துருக்கிக்கு எதிராக இந்த ராஜதந்திர ஆயுதங்களை பயன்படுத்த முடியும். இதற்கிடையில், கிரீஸ் மற்றும் ஆர்மீனியாவுடனான உறவை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. இந்த தகவல்களை, கட்டுரை வடிவில், முன்னாள் வெளியுறவு செயலாளர் மற்றும் துருக்கி, எகிப்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுக்கான தூதராக பதவி வகித்த கன்வால் சிபல், என்டிடிவி ஆங்கில ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications