இதுக்கு பேரு தான் படிப்ஸ்... பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் எக்ஸாம் எழுதிய இளம்பெண்!
குழந்தை பெற்ற அரை மணிநேரத்தில் தேர்வு எழுதி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் எத்தியோப்பியா பெண் ஒருவர்.
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் பெண் ஒருவர்.
எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஊர் மேட்டு. அங்கு வசித்து வரும் அல்மான் டெரேஸ் என்ற 21 வயது பெண், திருமணத்திற்குப் பிறகும் படிப்பைத் தொடர்ந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான அவர் தனது தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.

மருத்துவர்கள் கொடுத்த பிரசவ தேதிக்கும், தேர்வுக்கும் இடையே இடைவெளி இருந்ததால், தீவிரமாக தேர்வுக்காக படித்துள்ளார் அல்மான். ஆனால் ரம்ஜான் காரணமாக அவரது தேர்வுகள் திடீரென தள்ளி வைக்கப்பட்டன.
இதனால் அவருக்கு பிரசவம் நடைபெற இருந்த வாரத்திலேயே தேர்வு தேதிகளும் அமைந்து விட்டன. ஆனாலும் எப்படியும் இம்முறை தேர்வை எழுதியே தீர்வது என தீவிரமாக இருந்துள்ளார் அல்மான்.
இந்நிலையில், தேர்வு நடக்கும் நாளன்று காலை திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தேர்வு ஆரம்பிப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால், பிரசவம் முடிந்ததும் தேர்வு எழுத ஆயத்தமானார் அல்மான். ஆனால் அவரால் மருத்துவமனையில் இருந்து வெளியில் செல்ல இயலாத சூழல்.
அதனால் தன் நிலை குறித்து தனது கல்வி நிர்வாகத்திடம் விளக்கி, மருத்துவமனையில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதி கேட்டார் அவர். அவர்களும் அதற்கு சம்மதிக்கவே, அவர் ஆங்கிலம், ஆம்ஹாரிக், மற்றும் கணக்கு ஆகிய தேர்வுகளை மருத்துவமனையில் இருந்தபடியே எழுதினார்.
குழந்தை பிறந்த பெண்கள் மிகவும் சோர்வாக, களைப்பாக இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்து, எந்த சூழலிலும் நினைத்ததை மன உறுதியுடன் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் அல்மான். இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. அல்மானுக்கும், அவரது மகனுக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications