அமெரிக்க வரிக்கு எதிராக மாஸ்டர் பிளான்.. நேச நாடுகளை ஒருங்கிணைக்க தொடங்கினார் சீனா அதிபர்!
பெய்ஜிங்: தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணத்தை தொடங்கியுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக நேச நாடுகளை ஒன்று திரட்ட முயன்றுள்ளார்.
இன்று வியட்நாம் சென்றிருந்த அவர், அமெரிக்காவின் வரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயல்பட தயாராவோம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், நம் நாட்டின் மீது எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு மற்ற நாடுகள் மீதும் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதிபராக தேர்வான பிறகு, சொன்ன மாதிரியே ஒவ்வொரு நாடுகளுக்கும் வரியை மாற்றி அமைக்க தொடங்கினார். இதில் நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்று எந்த பாகுப்பாடும் காட்டப்படவில்லை. குறிப்பாக அமெரிக்காவின் நெருங்கிய நண்பன் என்று அறியப்படும் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐப்பானுக்கு கூட வரி போட்டார்.
இந்தியாவுக்கும் வரி போட்டார். ஆனால் ஆசியாவில் வரி குறைவாக உள்ள நாடு இந்தியாதான். இப்படி இருக்கையில் வேறு எந்த நாடுகளும் வரிக்கு எதிராக பேசாத நிலையில் சீனா அமெரிக்கா மீது பதில் வரியை போட்டது. அவ்வளவுதான் கண் சிவந்த டிரம்ப் வரியை அதிகரித்தார். சீனா மீது 145% வரை தற்போது வரியை போட்டிருக்கிறார் டிரம்ப். சீனாவும் பதிலுக்கு 125% வரை அமெரிக்க பொருட்களுக்கு வரியை போட்டிருக்கிறது. எனவே சர்வதேச அளவில் வர்த்தக போர் தொடங்கியிருக்கிறது.
இந்த நேரத்தில் சீன அதிபர் தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணத்தை தொடங்கியிருக்கிறார். முதல் கட்டமாக இன்று வியட்நாம் சென்ற அவர், அதிபர் லுவோங் குயாங் மற்றும் பிரதமர் பாம் மின் சின்ஹ் ஆகியோரை சந்தித்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வியட்நாமின் புதிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தோ லாம் உடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜி ஜின்பிங், "அச்சுறுத்தலுக்கு எதிராக சண்டையிட்டு உலக விநியோக சங்கிலியை பாதுகாப்போம்" என்று கேட்டுக்கொண்டடிருக்கிறார்.
எல்லாம் ஓகேதான் ஆனால் வியட்நாம் சீனா-அமெரிக்கா என இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. எனவே, சீன அதிபரின் பேச்சை அந்நாடு கேட்குமா என்பது சந்தேகம்தான். வரி விஷயத்திலிருந்து வியட்நாம் கூட தப்பவில்லை. சீன பொருட்கள் வியட்நாம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறது என்று விமர்சித்திருந்த டிரம்ப், வியட்நாம் பொருட்களுக்கு 46% வரை வரியை போட்டிருந்தார். ஆனால், 90 நாட்களுக்கு எல்லா வரியும் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியிருப்பதால் தற்போது பெரிய பஞ்சாயத்து இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த 90 நாட்கள் பிரேக் சீனாவுக்கு மட்டும் கிடையாது. எனவேதான் சீனா மற்ற நாடுகளையும் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த முயற்சியில் அடுத்ததாக மலேசியா மற்றும் கம்போடியாவுக்கும் போக இருக்கிறார். அங்கு சீனா சார்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு, பின்னர் வரி விஷயத்தில் ஒத்துழைப்பையும் கோர இருக்கிறார். அமெரிக்காவுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும்தான். ஆனால் அது சீனா மூலமாக கொடுக்க வேண்டுமா? என்று பல நாடுகள் யோசித்து வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications