பிரண்ட்ஸ் எங்க வீட்ல வித்தியாசமான செடி இருக்கு! வீடியோ வெளியிட்ட மகன்! தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்
காஞ்சிபுரம்: எங்கள் வீட்டில் வித்தியாசமான செடி வளர்கிறது என மகன் பரப்பிய வீடியோவால் அவருடைய தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி (43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெட்டப்பட்ட 20 லிட்டர் வாட்டர் கேனில் மணல் பரப்பி அதில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்த செடி சுமார் 3 அடிக்கு வளர்ந்திருந்தது. இந்த செடியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வளர்த்த டிரைவர் கண்ணுசாமியையும் கைது செய்தனர். தான் பயன்படுத்துவதற்காக கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரியவந்தது. அவர் கஞ்சா செடியை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வந்திருந்தார். அப்படியிருக்கும் போது போலீஸாருக்கு எப்படி தெரிந்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணுசாமி தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய மனைவி சந்தேகத்தின் பேரில் கேட்ட போது கூட அது புளிச்சகீரை செடி உடம்புக்கு நல்லது என கூறி சமாளித்துள்ளார். இதனை கேட்ட மனைவியும் அவரது பேச்சை நம்பி அந்த "கீரைச் செடிக்கு" தினமும் தண்ணீர் ஊற்றி வந்தார். இந்த நிலையில் வீட்டில் ஒரு வித்தியாசமான செடி இருப்பதாக அவருடைய மகன் நினைத்தார்.
இதை தனது நண்பர்களிடம் காட்டுவதற்காக செல்போனில் வீடியோவாக எடுத்து அதை நண்பர்களின் செல்போனின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி அப்படியே பரவிய நிலையில் போலீஸாரின் செல்போனுக்கும் எப்படியே பரவிவிட்டது. இதையடுத்துதான் போலீஸார் கண்ணுசாமியின் வீட்டில் சோதனை போட்டனர்.
கஞ்சா செடி குறித்து மகன் வெளியிட்ட வீடியோவால் தந்தை கண்ணுசாமி இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவருக்கு கஞ்சா விற்பனையில் ஏதேனும் தொடர்பிருக்கிறதா, இந்த செடியை யாரிடம் இருந்து அவர் வாங்கினார் என்பது குறித்தெல்லாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெளியே கஞ்சா வாங்கினால் சிக்கிவிடுவோம் என கருதி கஞ்சா செடியையே வீட்டில் வளர்த்து வருகிறார்கள். அந்த தகவலை அறிந்து கொள்ளும் போலீஸார் அவர்கள் வீட்டிலிருக்கும் கஞ்சா செடியை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications