நடிகை கவுதமி புகார்! நில மோசடி வழக்கில் மீண்டும் கைதான அழகப்பன்!
காஞ்சிபுரம்: நடிகை கவுதமி, அவரது சகோதரியின் சொத்துகளை அபகரித்ததாக அழகப்பனை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். அவர் ஏற்கெனவே கவுதமியின் சொத்தை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர்.
1990களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை கவுதமி. இவர் தான் சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட போது அந்த சொத்துகளை பராமரிப்பதற்காக பவர் ஆப் அட்டர்னியாக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.
அதன்படி 2004 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை கவுதமி பெயரிலும் தனது மனைவி நாச்சியாள் பெயரிலும் பதிவு செய்திருந்தார். இது குறித்து நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், நாச்சியாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த சூழலில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகப்பனின் மனைவி நாச்சியாள் மற்றும் மருமகள் ஆர்த்தி தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், நாச்சியாளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும், மருமகள் ஆர்த்திக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, புகார்தாரரான நடிகை கௌதமி தரப்பில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அழகப்பனின் மனைவி நாச்சியாள் மற்றும் மருமகள் ஆர்த்தி ஆகியோர் தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அது போல் அழகப்பனுக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சுமார் 25 கோடி ரூபாய்க்கு சொத்துகளை அழகப்பன் அபகரித்ததாக கவுதமி புகார் செய்திருந்தார்.
அவர் சென்னை மட்டுமல்லாமல் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கவுதமி, அவருடைய சகோதரியின் சொத்துகளை வேறு ஒருவருக்கு விற்றதாக எழுந்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் போலீஸார் அழகப்பனை மீண்டும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications