மகிழ்ச்சியின் உச்சியில் விஜய் ரசிகர்கள்.. சுடச்சுட சிக்கன் பிரியாணி.. வயிறார விருந்து வைத்து அசத்தல்
காஞ்சிபுரம்: நடிகர் விஜயின் அரசியல் வருகைக்குப் பின்னர் வெளியாகும் முதல் படமான கோட் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியான நிலையில், காஞ்சிபுரம் பாபு திரையரங்க வளாகத்தில் விஜய் ரசிகர்களுக்கும், திரைப்படம் பார்க்க வந்த 2 ஆயிரத்து 500 ரசிகர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுடச்சுட பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். கோட் திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் வெளியாகும் கடைசி இரு படங்களில் ஒன்று என்பதாலும், இதில் டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தி சின்ன வயது விஜய்யை கொண்டு வந்துள்ளதாலும் இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தில் விஜய் மட்டுமல்லாமல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும், மறைந்த பிரபல பின்னணி பாடகியான பவதாரணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக நேற்று வெளியாகியது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் முதல் காட்சி தொடங்கியது. 750 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதல் சிறப்புக் காட்சிகள் தொடங்கப்பட்டன. விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து, மேளதாளம் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படத்தின் முதல் நாள் காட்சியை வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, வைபவ் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து இத்திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.
கோட் திரைப்படத்தை மக்களுக்கு இடையூறு இல்லாமல் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். தனது திரைப்படம் ரிலீஸாகும்போது விஜய் ரசிகர்களுக்கு இதுபோல அறிவுறுத்தல்களை வழங்குவது இதுதான் முதல்முறை.
கோட் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதனைக் கொண்டாடும் விதமாக, காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்து வைக்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. விஜய் மக்கள் நிர்வாகிகள் தளபதி விலையில்லா விருந்தகம் சார்பில் இந்து விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏழை, எளிய மக்கள் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்தனர். இதேபோல, லியோ பட வெளியீட்டின்போதும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விஜய் மக்கள் நிர்வாகிகள் பிரியாணி விருந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications