தொடங்கியது திமுக பவளவிழா பொதுக்கூட்டம்! அதிரும் காஞ்சிபுரம்! முதல்வருடன் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்: திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இன்று காஞ்சிபுரத்தில் பவளவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
திமுக உருவானதே வரலாற்றின் தேவை என்று, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியா முழுவதும் பரவி கிடந்த மத பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள், பொதுத்துறை பணிகளில் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் போன்றவற்றிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் சிறு சிறு கிளர்ச்சிகள் நடந்தன. ஆனால் தமிழ்நாடு இதில் முற்றிலும் மாறுபட்டிருந்தது. கிளர்ச்சி ஒரு பக்கம் எனில், மறுபுறம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் மாற்றத்தை சாத்தியமாக்க முடியும் என தமிழக தலைவர்கள் நம்பியிருந்தனர்.

இந்த நம்பிக்கையில் கடந்த 1916ல் பிறந்ததுதான் நீதிக்கட்சி. இது தேர்தல் அரசியலில் பங்கெடுத்து, அனைத்து மக்களுக்குமான உரிமைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கியது. மறுபுறம் தந்தை பெரியார், தனது தீரமான முற்போக்கு சிந்தனைகளால் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் மக்களிடையே, மூட நம்பிக்கைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஒருபுள்ளியில் இணைந்து திராவிட கழகமாக உருவானது.
இதுவே 1949ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகமாக உருவானது. அன்று முதல் சமூக நீதி கோட்பாட்டை முன்னிறுத்தி தேர்தல் மற்றும் அரசியலில் இக்கட்சி பெரும் பங்காற்றி வருகிறது. இக்கட்சி தோன்றி 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்று திமுக பவள விழா நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று மாலை 5 மணிக்கு திமுகவின் பவள விழா தொடங்கி உள்ளது. இந்த விழாவுக்கு பிரம்மாண்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், அதியமான், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications