எடப்பாடி பழனிசாமி நம்பர் ஒன் தான்.. எதில் தெரியுமா? விட்டு விளாசிய முதல்வர் ஸ்டாலின்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை நான் மேற்கொண்டேன். அதில் மக்களுடைய கோரிக்கைகளை நான் பெற்றுக்கொண்டேன். அப்போது ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் உங்கள் குறைகளை தீர்ப்பேன் என்று கூறினேன். அதேபோல் தற்போது ஆட்சிக்கு வந்து அதற்கு என தனி துறையை ஆரம்பித்து அதனை நான் நிறைவேற்றியுள்ளேன்.
பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில் 14 வது இடத்தில் இருந்தது. நாம் பதவியேற்ற பின் தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போது எல்லா துறையிலும் முன்னனி மாநிலமாக மாறியுள்ளது. எல்லாவற்றிலும் இப்போது தமிழ்நாடு நம்பர் ஒன்றாக உள்ளது.
எடப்பாடி சொல்கிறார் அவரது ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது என்று பேசுகிறார். பழனிசாமி அவர்களே நீங்கள் எதில் நம்பர் ஒன் என்று தெரியுமா?... பதவி சுகத்திற்காக மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தீர்களே அதில் தான் நீங்கள் நம்பர் ஒன்.
எப்படியெல்லாம் மோடிக்கு, மத்திய அமைச்சர்களுக்கு, பாஜகவுக்கு காவடி பாடினீர்கள்.
மோடி தான் எங்கள் டாடி என்று சொன்னீர்களே.. அதுமட்டுமில்லை பாஜக இங்கு இந்தியை திணித்த போது நாங்கள் எதிர்த்தோம். ஆனால் அப்போது நீங்க என்ன சொன்னீங்க.. அண்ணா மும்மொழி கொள்கையை ஆதரித்தார் என்று சொல்லி அதற்கு ஆதரவு கொடுத்த பச்சோந்தி தான் இந்த பழனிசாமி.
அதிமுகவும் பாஜகவும் இயற்கை கூட்டணி செண்டிமேண்ட் மழை பொழிந்தவர்கள் தான் எடப்பாடி நாடக கம்பெனி. இப்போது பிரிந்தது போல் நாடகம் போடும் எடப்பாடி இன்றைக்கு பேட்டி கொடுக்கும் போது செய்தியாளர்கள் ஒருவேளை அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்று கேட்கிறார்கள். இதற்கு ஒப்புக்கு கூட ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லாமல் பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார்.
எங்கேயாவது பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று சொல்லியிருக்கிறார். பாஜகவை அதிமுக ஒருபோதும் ஆதரவு கிடையாது என்று ஏன் சொல்ல முடியலை. அதிமுகவுக்கு போடும் வாக்கு என்பது பாஜகவுக்கு போடும் வாக்குகள் தான். எடப்பாடியின் பேச்சு மக்களிடம் எடுபடாது.
மாநிலங்கள் மீது அக்கறை இருப்பதாக பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். மாநில முதல்வராக இருந்த போது மாநிலங்களை நேசித்த பிரதமர் மோடி, இப்போது பிரதமர் ஆனதும் மாநிலங்களை வஞ்சிக்கிறார். சிரிக்காமல் மோடி பொய் பேசுகிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரலாறு திருத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கமாக உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, "நான் முதல்வன் திட்டத்தால்" ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று இருக்கின்றனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது. இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். இந்த திட்டத்தால் சுமார் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கியுள்ளேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கி இருக்கிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி நம்மிடம் கேட்கிறார். நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்ற படத்திற்கேற்ப, பாஜக அரசு உங்களுக்கு விருது வழங்கியிருக்கும். பழனிசாமி அவர்களே நாங்கள் மக்களிடம் விருது வாங்கியுள்ளோம். அது எல்லாவற்றையும் விட பெரியது. இன்னொரு விருது, ஜூன் 4ம் தேதி 40க்கு 40 என்ற விருது கிடைக்கும் பொறுத்திருந்து பாருங்கள்.
ஜவுளி ஏற்றுமதியில் நம்பர் 1, தோல் பொருள் ஏற்றுமதியில் நம்பர் 1, ரெடிமேட் ஏற்றுமதியில் நம்பர் 1, ஏற்றுமதி ஆயத்த நிலைக் குறியீட்டில் நம்பர் 1, கர்ப்பிணி சுகாதாரக் குறியீட்டில் நம்பர் 1, மகப்பேறுக்கு பிந்தைய கவனிப்பில் நம்பர் 1, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் நம்பர் 1, 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களுடன் நாட்டிலேயே நம்பர் 1. இவ்வாறு தமிழ்நாடு இந்த ஆட்சியில் நம்பர் ஒன்னாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications