காக்கா கொண்டு வந்து போட்ட அழுகிய முட்டையால் நாற்றம்.. மலம் கலக்கவில்லை.. மாவட்ட கலெக்டர் விளக்கம்!
காஞ்சிபுரம்: பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். காகம் கொண்டு வந்து போட்ட அழுகிய முட்டையால் துர்நாற்றம் ஏற்பட்டதாக கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம திருவந்தவார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களை அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

உடனே அங்கு சென்று பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர், குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருக்கலாம் என்பதால் மாணவர்களை அந்த குடிநீரை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறி, போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தொட்டியிலிருந்த குடிநீர் முழுவதையும் வெளியேற்றினனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்மையில் பள்ளி ஒன்றின் சுவரிலும், அதற்கு முன்னதாக, பள்ளி சத்துணவுக் கூடத்தின் பூட்டிலும், கதவிலும் மலம் பூசப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக தகவல் பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற திருவந்தவார் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். குடிநீர் தொட்டியில் ஏறி, அதனை திறந்து பார்த்தார். மேலும், பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அதிக பயனற்ற குடிநீர் தொட்டியில் அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியை இடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications