இந்த எளிமை தான் இறையன்பு! தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிப்பு! கிராம சபைக் கூட்டம்!
காஞ்சிபுரம்: மே ஒன்றான இன்று தொழிலாளர் தினம் என்பதால் துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு.
Recommended Video
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்கச் சென்ற அவர் இவ்வாறு அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலும் விவரம் வருமாறு;

தொழிலாளர் தினம்
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார். இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

அரசுத் திட்டங்கள்
மேலும், மத்திய மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் தலைமைச் செயலாளர் இறையன்பு விவாதித்தார்.

கிராம சபைக் கூட்டம்
மேலும், கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தி பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெரிய பதாகை மூலம் வரவு, செலவு கணக்கு வைக்கப்பட்டது. கிராமசபைக் கூட்டத்திற்கான நோக்கத்தை இறையன்பு முன்னிலையில் ஊராட்சி மன்ற செயலர் படித்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தொழிலாளர்களுக்கு சால்வை
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சால்வை அணிவித்துக் கௌரவித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தூய்மைப் பணியாளர்கள் அகமகிழ்ந்து நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications