ஓ பன்னீர் செல்வம் பக்கம் யாருமே இல்லை.. எல்லாமே எடப்பாடி பழனிச்சாமி தான்.. வாய்விட்ட அமைச்சர்! யாரு?
காஞ்சிபுரம்: அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வரும் நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் ஓ. பன்னீர்செல்வம் பக்கம் யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் எல்லாரும் இருக்கிறார்கள் என அமைச்சர் தாமோ அன்பரசன் பரபரப்பாக பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே படப்பையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குன்றத்தூர் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பங்கேற்றார். 1500 திமுக நிர்வாகிகளுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

தாமோ அன்பரன் பேச்சு
இதையடுத்து அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார். அப்போது கடந்த ஒன்றரை ஆண்டில் திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் அதிமுகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்த வேளையில் தாமோ அன்பரசன் கூறியதாவது: மின்கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம். இது பல பேருக்கு தெரியாது. இருப்பினும் கூட அதிமுக பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். மக்களிடம் அதுபற்றி எடுத்துரைக்க வேண்டும்.

பிளவுப்படுத்த அதிமுக
எம்ஜிஆர், ஜெயலலிதா மறைந்த பிறகு அவர்களின் நினைவு நாளின் போது நினைவிடத்தில் ஆறு முதல் ஏழு பேர் தனி தனியாக மாலை அணிவித்தனர். இதனை நீங்களே பார்த்து இருப்பீர்கள். சசிகலா, தினகரன், வளர்ப்பு மகன் , எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என அனைவரும் தனித் தனியாகச் சென்றனர். தற்போது அதிமுக பிளவுப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் பக்கம் யாருமில்லை
ஓ பன்னீர்செல்வம் பக்கம் யாரும் இல்லை. ஊருக்கு ஒருத்தர் தான் இருக்கிறார்கள். போஸ்டர் அடிச்சி ஒட்டுவதற்கே தான் இருக்கிறார்கள். கட்சி ஒன்றாக இருப்பது எடப்பாடி பழனிசாமி பக்கம் தான். ஓ பன்னீர்செல்வம் பக்கம் போனா கட்சியில் இல்லாமல் போய் விடுவோம் என பலரும் நினைக்கின்றனர். இதனால் இருக்கிற இடத்தில் இருப்போம் என இருக்கிறார்கள்'' என்றார்.

உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் ஓரிஜினல் அதிமுக நாங்கள் தான் என எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் கூறி வரும் நிலையில் அமைச்சர் தாமே அன்பரசன் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
