உற்சாக என்ட்ரி கொடுத்த செந்தில் பாலாஜி! ஒன்றரை வருசமாச்சு இப்படி பார்த்து! எழுந்து நின்ற அமைச்சர்கள்
காஞ்சிபுரம்: சுமார் ஒன்றரை ஆண்டு காலத்திற்குப் பிறகு கட்சிப் பொதுக்கூட்ட நிகழ்வில் இன்று பங்கேற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நேற்று முன் தினம் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர்கள் பலரும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்த பொதுக்கூட்டம் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இந்த வலுவான கூட்டணி தொடர்வதற்கான கால்கோள் நடும் விழாவாகவும் பார்க்கப்படுகிறது. எனவே திமுக பவள விழா பொதுக்கூட்டம் திமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த பவள விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றுள்ளார். 471 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் ஜாமீனில் புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார்.
செந்தில் பாலாஜி விரைவில் தமிழக அமைச்சரவையில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் செந்தில் பாலாஜி. காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த செந்தில் பாலாஜியை திமுகவினர் வரவேற்றனர்.
செந்தில் பாலாஜி வருகை தந்தபோது, பவள விழா அரங்கில் குழுமி இருந்த திமுகவினர் உற்சாக ஆரவாரம் செய்தனர். மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் பலரும் எழுந்து நின்று செந்தில் பாலாஜிக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
திமுக பவள விழாவில் பங்கேற்றுள்ளது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, "எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமூகநீதியும் சமத்துவமும் நிறைந்த தமிழ்நாட்டை படைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில், தந்தை பெரியாரின் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் துவக்கி, தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கட்டிக்காத்து,
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இரும்பிலான இமயமலை போல உயர்ந்து நிற்கும், திமுக எனும் அறிவார்ந்த இயக்கத்தின் வயது 75. புரட்சிகரமான கொள்கைகளால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நிலைத்து நிற்கும் எழுச்சிமிக்க கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தொண்டனாக கலந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications