திமுக கூட்டணி உடைய அற்ப காரியங்களை செய்கின்றனர்.. உங்களின் கனவு பலிக்காது.. ஸ்டாலின் பேச்சு
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் உள்ள நம் கூட்டணியை பார்த்து தான் பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் ‛இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது. சில கட்சிகளின் கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு பிறகு உடைந்துவிடும். ஆனால் நம் கூட்டணி அப்படியில்லை. கொள்கை கூட்டணி. இது தான் பலருக்கும் பொறாமையாக இருக்கிறது. நமக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று அற்பதனமான காரியங்களை பரப்பி தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது என முதல்வர் ஸ்டாலின் திமுகவின் பவளவிழா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக இன்று காஞ்சிபுரத்தில் பவளவிழா நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.

இந்த விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் உடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
அதன்பிறகு இறுதியாக முதல்வர் ஸ்டாலின் விழாவில் பேசினார். ‛எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்' பாரதிதாசன் வரிகளோடு திமுக பவளவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: வீழ்ச்சியுற்ற தமிழ்நாட்டை எழுச்சிபெற வைக்க திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் அவர் உருவாக்கிய பேரியக்கத்தின் பவளவிழாவை நடத்தி வருகிறோம். இது திமுகவுக்கு கிடைத்திருக்கும் பெருமை. அண்ணாவுக்கு கிடைத்த பெருமை. 1949ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் நாள் இந்த இயக்கம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் வைத்து அண்ணாவும், அவர்களின் தம்பிமார்களும் தொடங்கியபோது வானம் தனது வாழ்த்துகளை மழையாக பொழிந்தது. அன்று வான்மழை வாழ்த்திய இந்த கழகம் தான் இன்று வையகம் வாழ்த்தும் கழகமாக வளர்ந்துள்ளது.
கழகத்தின் வெற்றியின் மூலமாக தமிழகத்தை வளர்த்தார் அண்ணா. அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற கருணாநிதி அரைநூற்றாண்டு காலம் திமுகவையும், அதன்மூலம் தமிழ்நாட்டையும் வளர்த்தார். கருணாநிதி விட்டு சென்ற பணியில் இருந்து இம்மி அளவு கூட மாறாமல் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம்.
திமுக என்ற மூன்றெழுத்தில் தான் நமது மூச்சு, பேச்சு, உயிரும் அடங்கி இருக்கிறது. இப்படிப்படிப்பட்ட கழகத்தின் பவளவிழாவுக்கு வந்த கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு திமுக தலைவராக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களை வாழ்த்தியதில் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு கிடைத்த புகழ்மாலையில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. கழகத்தை பொறுத்தவரை தலைவன், தொண்டன் என்று இல்லாமல் உடன்பிறப்புகள் என்று செயல்பட்டு வருகிறதோ அதேபோல் தான் தோழமை கட்சிகளையும் கருதுகிறோம்.
நாம் தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்த பிறகு அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது வெற்றி கூட்டணி. நம் கூட்டணியை பார்த்து தான் பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் ‛இந்தியா' கூட்டணி அமைக்கப்பட்டது. சில கட்சிகளின் கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு பிறகு உடைந்துவிடும். ஆனால் நம் கூட்டணி அப்படியில்லை. கொள்கை கூட்டணி. இது தான் பலருக்கும் பொறாமையாக இருக்கிறது. நமக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா? என்று அற்பதனமான காரியங்களை பரப்பி தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் வெற்றி கணக்கில் பாசிசத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஐக்கியமாகி உள்ளோம்.












Click it and Unblock the Notifications