"தேர்தலில் நின்றால் ஈனம் மானம் எல்லாம் பார்க்கக் கூடாது.. ஜெய்ச்சிட்டு வரணும்.." அமைச்சர் அட்வைஸ்
காஞ்சிரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் பேச்சு இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முனை போட்டி
திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் இருந்த அதே கூட்டணி தான் தொடர்கிறது. அதேநேரம் மற்ற கட்சிகள் தனித்தே தேர்தலில் களமிறங்குகின்றன. அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தா.மோ.அன்பரசன்
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நிமிலி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் திமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள், விசிக சார்பில் போட்டியிடும் 1 வேட்பாளர் என மொத்தம் 15 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

ஈனம் மானம் பார்க்கக் கூடாது
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தேர்தல் என்று வந்துவிட்டால், ஈனம் மானம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். சொந்தக்காரர்களிடம் சண்டை போட்டிருக்கிறார்கள் என்பதற்காக அவரிடம் ஓட்டு கேட்காமல் இருந்துவிடக் கூடாது. அனைவரிடமும் பாரபட்சமின்றி வாக்கு கேட்க வேண்டும். சண்டை போட்ட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய் கையெடுத்துக் கும்பிடு, உங்களுக்காகத் தேர்தலில் வேலை செய்ய வைக்க வேண்டும். அவர் மூலமாகக் கட்சிக்கு 10 ஓட்டு கிடைக்கலாம்.

அனைவரும் வெல்ல வேண்டும்
நீங்கள் இவ்வாறு செய்யாமல் விட்டால், உங்களுக்கு எதிராகவும் உங்களுடைய சொந்தக்காரர் வேலையையும் செய்யலாம். அதனால் ஒரு நான்கு ஓட்டுகள் போகும். சீட்டு வாங்கிய அனைவரும் ஜெயிச்சுட்டு தான் வர வேண்டும். வார்டுகளில் ஏதாவது பிரச்சினை என்றால் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்களிடம் தெரிவியுங்கள் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைப்பார்கள்.

தொடப்பக்கட்டை உதாரணம்
அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தால் மட்டுமே பலம், தனித்தனியாக இருந்தால் பலம் இல்லை. தொடப்பக்கட்டை தனித்தனி குச்சியாக இருந்தால் பலம் இல்லை, தொடப்பக்கட்டை முழுவதுமாக இருந்தால்தான் பலம். இதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் இருக்கும் 15 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட அதிமுக வந்துவிடக் கூடாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications