மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த நீதிபதி! ஓவர் சவுண்டு விட்ட நடத்துனர்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பேருந்தில் பயணிப்பது நீதிபதி என்று தெரியாமல் வழக்கம் போல் தனது சேட்டையை காட்டிய நடத்துனர், போக்குவரத்து காவலர்கள் விதித்த அபராதத் தொகையால் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து போய்விட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் செம்மல் என்பவர் தனது சொந்தப் பணி காரணமாக திண்டிவனம் சென்றிருக்கிறார். இந்நிலையில் திண்டிவனத்திலிருந்து மீண்டும் காஞ்சிபுரம் திரும்புவதற்காக தனது வாகனத்தை தவிர்த்துவிட்டு மக்களோடு மக்களாக தனியார் பேருந்து ஒன்றில் பயணித்திருக்கிறார்.

அப்போது அந்தப் பேருந்தில் காதை கிழிக்கும் அளவுக்கு பாடல் சத்தம் அதிகம் இருந்ததால் அதை குறைக்குமாறு நடத்துநரை அழைத்து கூறியிருக்கிறார் நீதிபதி செம்மல். நடத்துனரோ தன்னிடம் இப்படி கூறுவது ஒரு நீதிபதி என்பது தெரியாமல், அதனை சட்டை செய்யாமல் ஓவர் சவுண்டு விட்டிருக்கிறார்.
பாடல் சத்தத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை. ஏற்கனவே பேருந்தில் கூட்டம் அதிகம் இருக்கும் நிலையில், நடத்துநரின் இந்த பொறுப்பற்ற செயலால் வேதனை அடைந்த நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் போக்குவரத்து போலீஸார் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
இதையடுத்து சினிமா பாட்டு சத்தத்தை குறைக்காத நாராயணமூர்த்தி என்ற தனியார் பேருந்தை ஆய்வு செய்த போக்குவரத்து காவலர்கள் அபராதத் தொகையை விதித்ததுடன் பயணிகளிடம் ஓட்டுநரும், நடத்துநரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பாடம் எடுத்தனர்.
இதனால் திகைத்துப் போன அந்த பேருந்தின் ஓட்டுநரும், நடத்துரும் பாட்டு சத்தத்தை குறைக்கச் சொன்னது நீதிபதி என்று தங்களுக்குத் தெரியாது என்றும் இனிமேல் பயணிகளிடம் கனிவாகவும், கவனமாகவும் நடந்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications