ஆதார் கார்டை பார்க்கும் போலீஸ்.. பரந்தூரில் தவெக பொருளாளருக்கே அனுமதி மறுப்பு! பரபரக்கும் கள நிலவரம்
காஞ்சிபுரம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பரந்தூர் வருகை தரும் நிலையில், பரந்தூர் நோக்கி வரும் தவெக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏகனாபுரம் அருகே கண்ணந்தாங்கல் சந்திப்பு பகுதியில் போலீசார் தவெக தொண்டர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
13 கிராம மக்களை தவிர வெளியூர் மக்களுக்கு இன்று அனுமதி இல்லை என்பதால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பரந்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்த ஆதார் அட்டையை போலீசார் சோதித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் இடம் தர மறுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் வைத்து மக்களை சந்திக்க முடிவு செய்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர்.

ஆனால் அம்பேத்கர் திடலில் கூட்டம் நடத்த அனுமதியில்லை என போலீசார் தவெகவினர் அமைத்த பந்தல்களை அகற்றக் கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தவெகவினர், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இடம் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் பரந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்திப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்
இன்று பகல் 12 மணியில் இருந்து 1 மணி வரை பரந்தூர் போராட்டக் குழுவினரான 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களை விஜய் சந்திக்கிறார். இதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு வாகனங்களில் மட்டுமே மக்கள் வர வேண்டும், அதிக கூட்டம் கூடாமல் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மக்கள் வர வேண்டும் என காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, பரந்தூர் சென்று கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தனியார் மண்டபத்துக்கு வந்துள்ளனர்.
தவெக பொருளாளர் கார் தடுத்து நிறுத்தம்
இந்நிலையில், பரந்தூர் சென்ற தவெக பொருளாளர் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அனுமதித்த வாகனங்களுக்கு மட்டுமே பரந்தூர் செல்ல அனுமதி என காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அனுமதித்த வாகனங்களின் பட்டியலில் வெட்கட்ராமன் கார் விவரம் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல அனுமதி கோரி காஞ்சிபுரம் எஸ்.பியிடம் மனு அளித்தவர் தவெக பொருளாளர் வெங்கட்ராமன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காருக்கே அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக தொண்டர்கள் தடுப்பு
பரந்தூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராம மக்களை தவிர வெளியூர் மக்களுக்கு, மண்டபத்துக்குள் அனுமதி இல்லை என்பதால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பரந்தூர் சுற்றுவ ட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை உறுதிப்படுத்த போலீசார் ஆதார் அட்டையை வாங்கி உறுதி செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications