5 பெரிய ஆரம், 23 நெத்தி சுட்டி, ஒட்டியாணம்.. 561 கிராம் நகைகளை அரசிடம் ஒப்படைத்த உத்தரமேரூர் மக்கள்
உத்தரமேரூர்: உத்தரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிடைத்த 5 பெரிய ஆரங்கள், 23 நெத்தி சுட்டி, ஒட்டியாணம் உள்பட 561 கிராம் தங்க ஆபரணங்களை அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
உத்தரமேரூரில் சோழ காலத்தை சேர்ந்த குழம்பேஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது.

வருவாய் துறை
அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. மேலும் பழமையான கோவிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அப்போது கோவிலின் நிலைவாசற்படியை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும்போது குவியல் குவியலாக தங்கம் கிடைத்ததாக வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைகளை ஒப்படைக்க
நகைகளை வாங்க வட்டாட்சியர் ஏகாம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். ஆனால் நகைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க போவதாக கூறி நகைகளை அரசிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என கோட்டாட்சியர் வித்யா கெடு விதித்தார்.

கருவூல பெட்டகம்
இதையடுத்து கிராம நாட்டாமை உள்ளிட்டோர் சேர்ந்து ஆலோசனை நடத்தினர். அதில் நகைகளை அரசிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்துள்ளனர். அதாவது கிடைத்த நகைகளை தனித்தனியாக அளவீடு செய்து அதை போட்டோ எடுத்து மத்திய கருவூல பெட்டகத்தில் வைக்க வேண்டும்.

அதிகாரிகள்
இதற்கு ஊர் நாட்டாமை, அரசு அதிகாரிகள் இணைந்து கையெழுத்திட்டு கிராம மக்கள் முத்திரையிட்டு அந்த நகைகளை பாதுகாக்க வேண்டும். திருப்பணியின் போது தங்களிடம் அந்த நகைகளை மீண்டும் அரசு ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கும் போது அந்த நகைகளை அரசு முன்னிலையில் அதே நிலைவாசல்படிக்கு அடியில் வைத்து விடுகிறோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசு ஒப்புக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

நகைகள் விவரம்
இந்த நிலையில் இன்று மாலை 561 கிராம் நகைகளையும் அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர். வட்ட வடிவிலான நெத்திச்சுட்டி- 23, பெரிய நெத்தி சுட்டி- 7, ஒட்டியாணம்- 1, குண்டுமணி- 29, உடைந்த நிலையில் உள்ள ஆரம் துண்டுகள்- 5, சிறிய வடிவிலான பிறை- 1, மகாலட்சுமி உருவம்- 1, ஒட்டியாண தகடு - 3 உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டனவா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications