அசத்தும் வந்தே பாரத்.. திருநெல்வேலி ஓகே.. கன்னியாகுமரிக்கும் வந்தே பாரத் ரயில்? தென்தமிழகம் ஏங்குதே
சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக 4 நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் எல்.முருகனும் அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்பானது, தென் மாவட்ட மக்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
அதேசமயம், இந்த ரயில் சேவையை கன்னியாகுமரியை மையமாக வைத்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்க துவங்கி உள்ளது.

கோரிக்கை: வந்தே பாரத் ரயில் சேவையை, கன்னியாகுமரி டூ சென்னைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள், கடந்த சில மாதங்களாகவே வலுவடைய ஆரம்பித்தன.. மேல சங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் கடந்த மாதமே, கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்..
அந்த கோரிக்கை மனுவில், தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்வதற்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களிலேயே 14 மணி நேரம் ஆகிறது. இதனால் அவர்களுடைய அதிகமான நேரத்தை பயணத்திற்கு செலவிட வேண்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வருவதும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்வதும் இயலாத காரியமாக இருந்து வருகிறது.
நாட்டில் பல இடங்களில் இப்போது, மத்திய அரசு வந்தே பாரத் ரெயில்களை இயக்கி பொதுமக்களின் பயண நேரத்தை மிகவும் குறைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நெல்லையில் இருந்து இன்னும் கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை பணிகளும் முடிவடையாத சூழ்நிலையில் உள்ளது.
அண்ணாமலை: அதனால், தென் மாவட்ட மக்கள் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலன் கருதி சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இதே கோரிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பியிருந்தார்.
தற்போது, நெல்லைக்கு வந்தே பாரத் வரப்போகிறது என்பதால், அந்த ரயிலை குமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட குமரி மாவட்டத்துக்கு, திருநெல்வேலி, மதுரை வழியாக பயணம் செய்யும் விதத்தில் இதுவரை அறிவிக்கப்படவில்லையாம்.. இதை பயணிகள் சங்கத்தினர் வருத்தமாக சொல்கிறார்கள்..
இரட்டைப்பாதை: அதுமட்டுமல்ல, திருநெல்வேலி முதல் மேலப்பாளையம் வரையிலும், ஆரல்வாய்மொழி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இடங்களில் இரட்டைபாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்த பணிகள் முடிவு பெற்ற பிறகு குமரிக்கு வந்தே பாரத் ரயில்கள் வந்தால் நல்லா இருக்கும் என்கிறார்கள்..
கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நிலவும் இடநெருக்கடியை போக்க, குமரி மாவட்ட பயணிகளுக்கு தேவையில்லாமல் இங்கிருந்து கேரளா வழியாக சுற்று பாதையில் இயங்கும் ரயில்கள் மாற்றம் செய்தால் இடநெருக்கடி பிரச்சனைக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும்.. மேலும், ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை கொச்சுவேலியுடன் நிறுத்தம் செய்தால், ஞாயிற்றுக்கிழமை முனைய இடநெருக்கடி குறைந்து நாகர்கோவில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வசதி வாய்ப்புகள் வரும்.
வார விடுமுறை: வார விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்றும் கோருகிறார்கள்..
இதனிடையே, சென்னை - கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயில் சேவை வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த்தும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.. இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்திலும் இதுகுறித்து வலியுறுத்தியிருந்தார்.
சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பயன் அளிப்பதுடன் தென் தமிழகத்தின் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெறலாம். கூடுதலாக மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி - சென்னை இடையே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
வரப்பிரசாதம்: ஒருவேளை, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால், தென் மாவட்ட மக்களுக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications