நாளை பரந்தூர் வரும் விஜய்.. பத்திரிகையாளர்களை சந்திப்பாரா? தவெக நிர்வாகி அளித்த பதில்!
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சந்திக்கும் போது பத்திரிகையாளர்களை சந்திப்பாரா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் பதில் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டு முடியவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இதுவரை ஒருமுறை கூட நேரடியாக மக்களை சந்திக்கவில்லை. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை விழா, விக்கிரவாண்டி மாநாடு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பினை வழங்கி இருக்கிறார்.

இதனை தவிர்த்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் எந்த விவகாரத்திலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. இதனால் நடிகர் விஜய் வீட்டில் இருந்தே அரசியல் செய்ய முடியாது என்று விமர்சித்து வந்தனர். ஏனென்றால் அறிக்கைகள் மற்றும் எக்ஸ் தளத்தில் பதிவிடும் பதிவுகள் மட்டுமே அவருக்கான அரசியல் அடையாளமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக தவெக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விஜய் சந்திக்கவே இல்லை.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை சந்திக்க உள்ளதாக தெரிய வந்தது. இதன்பின் தவெக நிர்வாகிகள் பரந்தூர் மக்களை சந்திப்பதற்காக சில ஆய்வுகளிலும் ஈடுபட்டனர். அதேபோல் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை கடிதமும் அளிக்கப்பட்டது.
தற்போது பரந்தூரில் விவசாயிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க வருகிறார். அதற்கான பாதுகாப்புக்காக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கடிதம் அளித்திருந்தோம்.
அவர்கள் 20ஆம் தேதி பாதுகாப்பு அளிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளனர். காவல்துறை தரப்பில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பரந்தூரில் விவசாயிகளையும், மக்களையும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சந்தித்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் வரும் போது, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் தான் உடனிருப்பார்கள்.
மற்ற மாவட்ட நிர்வாகிகளோ, ரசிகர்களோ வர மாட்டார்கள். விவசாயிகளை சந்திப்பதற்காக மட்டுமே விஜய் வருகிறார் என்று தெரிவித்தார். அப்போது கட்சித் தொடங்கியதில் இருந்தே விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இம்முறை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, விவசாயிகளை சந்தித்து மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதற்கே நேரம் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications