மஃப்டியில் நின்ற சப் இன்ஸ்பெக்டர்கள்.. வாண்டடாக வண்டி ஏறிய விபச்சார கும்பல்.. நாகர்கோவிலில் சம்பவம்
குமரி: நாகர்கோவிலில் உள்ள ஓட்டலில் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார தொழில் செய்து வந்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ரகசிய சோதனைக்காக மஃப்டியில் சென்ற சப் இன்ஸ்பெக்டர்களையே, போலீஸ் என்று தெரியாமல் "வாங்க அழகிகளோட வந்து ஜாலியாக இருங்க.. கூடுதலாக 2 ஆயிரம் தந்தால் போதும்" என்று விபசாரத்துக்கு அழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாகர்கோவில் பகுதியில் மசாஜ் என்ற பெயரில் ரகசியமாக விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதன்பேரில் அவ்வப்போது போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகளை மீட்டும், அதனை நடத்தியவர்களை கைது செய்தும் வருகிறார்கள். அதன்படி தான் நேற்று முன் தினம் நாகர்கோவில் போலீசாருக்கு அழைப்பு ஒன்று வந்தது.

அந்த அழைப்பில் பேசியவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் ஸ்பா மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக கூறினார். இதையடுத்து அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்ட குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, வடசேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா குறிப்பிட்ட ஓட்டல் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டார்.
சாதாரண உடை அணிந்து அந்த பகுதியில் நோட்டமிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் சாதாரண உடையில் நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அங்கு நிற்பது போலீஸ் என்பது தெரியாமலேயே, "நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் மசாஜ் சென்டர் நடக்கிறது. அங்கு மசாஜ் செய்ய வேண்டும் என்றால் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் போதும். கூடுதலாக இன்னொரு 2 ஆயிரம் பணம் கொடுத்தால் அங்கு அழகிகளிடம் ஜாலியாக இருக்கலாம்" என்று கூறினார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும் எதையும் காட்டிக்கொள்ளாமல், ஓ அப்படியா.. சரி வாங்க.. என்று கூறி அந்த ஓட்டல் முன்பு சென்றார். அங்கு ஓட்டலில் 2 அழகிகள் இருந்தனர். இதைப் பார்த்துக்கொண்ட சப் இன்ஸ்பெக்டர், 'அய்யயோ.. பணம் இப்போது இல்லையே.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. பணத்தோடு வருகிறேன்' என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டு, மற்ற போலீசாரை அங்கு வர வைத்தார். இதையடுத்து அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினார்.
இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் பேசிய பெண், சென்னை போரூரை சேர்ந்த கலைச்செல்வி என்பது தெரியவந்தது. அவர் ஸ்பா சென்டரில் தொழிலாளியாக இருந்துகொண்டு, விபசாரத்துக்கு ஆட்கள் சேர்க்கும் புரோக்கராக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலைச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட எலக்ட்ரீசியன் சுதன் (31), தனியார் நிறுவன ஊழியர் அர்பாஸ் அலிகான் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதேபோன்று, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சென்னையை சேர்ந்த அழகிகள் இரண்டு பேரையும் மீட்ட போலீசார் அவர்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோன்று வடசேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் மற்றொரு சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர பாண்டியனும் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில், வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகே ரகசிய சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாதாரண உடையில் இருந்து கண்காணித்து வந்த அவரிடம், 2 பெண்கள் வந்து பேச்சு கொடுத்து விபசாரத்துக்கு அழைத்துள்ளனர். எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த பெண்கள் மசாஜ் சென்டர் என்ற பெயரில் தான் நடக்கிறது. எனவே ஒன்றும் கவலைப்படாமல் வாங்க.. என்று சொல்லி அழைத்து இருக்கிறார். இவரும் அந்த பெண்களிடம் நைசாக பேசி சம்பவம் நடக்கும் ஓட்டலுக்கு போலீசாருடன் சென்ற அதிரடி சோதனை நடத்தினார். இதில் விபசாரத்துக்கு அழைத்த பெண் சென்னையை சேர்ந்த இளம்பெண் நித்யா, சித்ரா என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ரகசிய சோதனைக்கு மஃப்டியில் சென்ற சப் - இன்ஸ்பெக்டர்களையே, போலீஸ் என்று தெரியாமல் விபச்சாரத்துக்கு வாங்க.. 2 ஆயிரம் கூடுதலாக தந்தால் போதும் என்று கூடி வாண்டடாக வண்டியில் ஏறி பெண் புரோக்கர்கள் கைதான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications