கன்னியாகுமரியில் வீடு புகுந்த திருடனுக்கு மறக்க முடியாத விருந்து .. வெளுத்துவிட்ட வீரத்தாய் மகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டுக்குள் புகுந்து தங்க சங்கலியை பறிக்க முயற்சி செய்த கொள்ளையனை வீரத்துடன் சண்டையிட்டு தாய்-மகள் அடித்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்து போன கொள்ளையன் தப்பி ஓடினான். ஆனால் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவால் வசமாக போலீசிடம் சிக்கி கொண்டான்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாம். இவருக்கு 63 வயது ஆகிறது . இவருடைய மனைவி பரம ஜெசி லெட். இவர்களுக்கு ஜெபஷாலினி என்ற மகள் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை மாலையில் ஜெஸ்டின் சாம் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி பரம ஜெசிலெட் மற்றும் மகள் ஜெப ஷாலினி ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இரவு 7.15 மணி அளவில் வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே பரம ஜெசிலெட் கதவை திறந்து யார் என்று பார்த்தார். அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், திடீரென பரம ஜெசிலெட்டை தாக்கி விட்டு வீட்டுக்குள் புகுந்து அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரம ஜெசிலெட், திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்டதுடன், தங்க சங்கிலியை விடாமல் பிடித்துக் கொண்டு போராடினார். அவரது சத்தம்கேட்டு ஓடி வந்த ஜெப ஷாலினி தாயாரின் சங்கிலியை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்த வாலிபரை சரமாரியாக அடித்தார்.
இன்னொரு பெண் அங்கு வந்து தன்னை கடுமையாக தாக்குவார் என்று எதிர்பார்க்காத அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் அவர் 2 பெண்களையும் கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டு தாக்கி நகைகளை பறிக்க முயற்சித்துள்ளார். ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தாயும், மகளும் தைரியமாக போராடி திருடனை அடித்தார்கள். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத இளைஞர், விட்டால் போதும் என்று சங்கிலி பறிப்பு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனிடையே பரம ஜெசிலெட் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் ஒரு வாலிபர் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து யார் என்று தேடினர்.
ஏதேனும் குற்றவழக்கில் சிக்கியவரா என்று பார்த்த போது, அவர் பழைய குற்றவாளி என்பது தெரிய வந்தது. குளச்சல் பனவிளை பகுதியை சேர்ந்த சிவா (24) தான் அங்கு நகை பறிக்க சென்று தர்ம அடி வாங்கியவர் என்பதும், அவர் மீது குளச்சல் மற்றும் மணவாளக்குறிச்சி பகுதிகளில் ஏற்கனவே திருட்டு உள்பட 7 வழக்குகள் இருப்பதும் உறுதியானது. அதைத்தொடர்ந்து சிவாவை போலீசார் தேடி சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications