அஜித், விஜய் ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்கள்.. மாஜி அமைச்சர் சொன்ன சேதி!
அதிமுகவுக்கு ஆதரவாக அஜித், விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்” என அதிமுக மாஜி அமைச்சர் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக எடப்பாடி அணி சார்பில் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, கமல்ஹாசன் உள்ளிட்டோரின் பிரச்சார திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் குமரி எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரம் ஈரோடு கிழக்கு நிலவரம் பற்றிப் பேசியுள்ளார்.

அதிமுக + பாஜக எம்.எல்.ஏக்கள்
கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் 2019ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாகர்கோவில் அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி பாஜக எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இனி எப்போதும் எடப்பாடி தான்
அப்போது தளவாய் சுந்தரம் பேசுகையில், "அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும் எடப்பாடி பழனிசாமி கைகளில்தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாஜக எங்களின் கூட்டணிக் கட்சி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நெல்லையில் நடைபெற்ற திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி இதனை தெளிவாக கூறிவிட்டார்" எனத் தெரிவித்தார்.

சிரிப்புதான் வருது
மேலும், ஓ.பன்னீர்செல்வம் குறித்து விமர்சித்துப் பேசிய தளவாய் சுந்தரம், "சென்னையில் இருந்து கொண்டு ஒருவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்போம். ஆனால் வேட்பாளரை எதிர்ப்போம்" என்று கூறியுள்ளார். இந்த விசித்திர அறிவிப்பை பார்த்து அடக்கமுடியாத சிரிப்பு தான் வருகிறது" எனத் தெரிவித்தார்.

அஜித் விஜய் ரசிகர்கள்
மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தளவாய் சுந்தரம், "ஈரோட்டில் அதிமுகவுக்கு ஆதரவாக அஜித், விஜய் ரசிகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அதை நானே என் கண்ணால் பார்த்தேன்" எனக் கூறினார்.

களம் சூடு பிடித்திருக்கும்
தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம், "திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிற்காமல், திமுக நின்றிருந்தால் களம் இன்னும் சூடு பிடித்திருக்கும். தமிழ்நாட்டுத் தாய்மார்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். இந்தத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications