மீனவர்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ.2,000.. கன்னியாகுமரியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட மக்களை கவரும் வகையில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கல்வி மற்றும் திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான 6 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

1. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் கன்னியாகுமரி நகராட்சியின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, பழையாற்றிலிருந்து கூடுதல் நீர் வழங்கும் வகையில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
2. முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
3. குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
4. களியக்காவிளை - கன்னியாகுமரி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் ரூ.9 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.
5. கல்குளம் வட்டம், முளக மூட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம், அதன் பழமை மாறாமல் ரூ.2 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
6. தமிழ்நாடு மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி மற்றும் திருமண உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிகள் உயர்த்தி வழங்கப்படும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவர்கள் காணாமல் போனால், அவர்களுக்குக் காப்பீடு மற்றும் நிவாரணத் தொகைகள் கிடைக்கும் வரை, அந்த மீனவர் குடும்பத்திற்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வாரியத்தின் மூலம் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications