2 பேர் தான் குறியே..ஓட ஓட விரட்டனும்..! முயற்சி செய்றேன்..குமரியில் அமித் ஷா சொன்ன வார்த்தை..!
கன்னியாகுமரி: அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும், அதிமுக திமுகவை ஓட ஓட விரட்டிவிட்டு பாஜக-வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்வதாக கன்னியாகுமரியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.
தேசியத் தலைவர்களின் வருகையால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சாலை பேரணியில் கலந்து கொண்டார். கன்னியாகுமரி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அமித் ஷா: அப்போது பேசிய அவர்,” "நான் கன்னியாகுமரியில் இருக்கக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன், நந்தினி ஆகியோருக்கு வாக்குகளை சேகரிக்க வந்த எனக்கு மிகச்சிறப்பான வரவேற்பை தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தல் தேசம் முழுவதும் நடக்கிறது. என்.டி.ஏ கூட்டணியினர் மோடிக்காக சிறப்பாக களப்பணியை செய்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழில் பேச முயற்சி: தமிழ் மொழி தமிழ் பண்பாடு தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொண்டுசெல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். உங்களிடத்தில் தமிழில் பேசமுடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன்.
திமுக-அதிமுக: அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். அதிமுக திமுகவை ஓட ஓட விரட்டிவிட்டு பாஜக-வுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். திமுக சனாதனதர்மத்தையும், அயோத்தியில் ராமர்கோயில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளனர்.
3வது முறையாக மோடி: நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்துச்சென்றுகொண்டிருக்கிறார். நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறேன். 3 வது முறையாக மோடி பிரதமராக வரும்போது 3 வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சிபெறும்.
அதிமுக மீது விமர்சனம்: தமிழ்நாட்டில் நான் செல்லும் இடம் எல்லாம் பாஜக 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள். 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும் அது பொன்னாரையும் சேர்த்துதான் இருக்க வேண்டும். நீங்கள் பொன்னாருக்கு வாக்களிப்பீர்களா. தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துவீர்களா. விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினிக்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்யுங்கள் என பேசினார். இதுவரை தமிழக பாஜகவினர் மட்டுமே அதிமுகவை விமர்சித்து வந்த நிலையில் தற்போது தேசிய தலைமையும் அதிமுகவை விமர்சித்து பேசியிருப்பது தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications