ஐ.டி கார்டை காட்டலயே.. அவங்க விஜிலென்சா? அமைச்சர் ஆட்களா? CCTV இருக்கு! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை!
கன்னியாகுமரி: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்தச் சென்ற 35 பேரில் ஒருவர்தான் ஐ.டி கார்டை காட்டி உள்ளார். 4 பேர்தான் கையெழுத்து போட்டுள்ளார்கள். மற்ற 31 பேரும் கட்சிகாரர்களா, அமைச்சரின் ஆட்களா எனத் தெரியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து விடுவிக்க அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டிருக்கிறார். இந்த பேரம் ரூ.51 லட்சத்தில் முடிந்து, முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரி பெற்றிருக்கிறார். இரண்டாவது கட்டமாக ரூ.31 லட்சத்தை கொடுக்குமாறு தொடர்ந்து சுரேஷ் பாபுவை மிரட்டி வந்துள்ளார் அங்கித். இதனையடுத்து சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர். இந்த ரூபாய் நோட்டுகளை அங்கித் பெற்ற நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமர் அலுவலகத்திலிருந்து சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்க உத்தரவு வந்துள்ளதாக கூறி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பேரம் பேசும்போது தனது உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி தொகையை குறைப்பதாகவும் அங்கித் திவாரி கூறியிருக்கிறார். இதன் காரணமாக அங்கித் திவாரியின் பின்னணியில் வேறு முக்கிய நபர்கள் சிலரும் இருக்கலாம் என்கிற சந்தேகம் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, அதிரடியாக மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.
சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்திய வரலாற்றில் மத்திய விசாரணை அமைப்பின் அலுவலகத்தில் மாநில விசாரணை அமைப்பு ரெய்டு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டு குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரவு முழுவதும் ரெய்டு நடத்தினார்கள். அங்கித் திவாரியை தவிர்த்து வேறு சில வழக்குகள் சம்பந்தமான ஃபைல்களை அவர்கள் எடுத்துள்ளனர். அந்த ஃபைல்களை அங்கித் திவாரியின் அறைக்கு கொண்டு சென்று பூட்டிவிட்டு, சிலருக்கு போன் செய்து கூறியுள்ளனர்.
அங்கு ரெய்டு நடத்தச் சென்ற 35 பேரில் ஒருவர்தான் ஐ.டி கார்டை காட்டி உள்ளார். ரெய்டு முடித்த பிறகு வழங்கிய பஞ்ச் நாமா-வில் 4 பேர்தான் கையெழுத்து போட்டுள்ளார்கள். மற்ற 31 பேரும் கட்சிகாரர்களா, அமைச்சரின் ஆட்களா எனத் தெரியவில்லை. அமலாக்கத்துறை சி.சி.டி.வி-யை எடுத்து பார்க்கத்தான் போகிறார்கள். எனவே, அமலாக்கத்துறை கொடுத்த புகாரின் பேரில் டி.ஜி.பி அந்த புகாரை ஆழமாக எடுத்து, மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் மிக முக்கியமான கேஸ் ஃபைல்கள், இன்ஃபார்மர்ஸின் பெயர்கள் உள்ளன. எனவே அங்கு நடந்தது என்ன என்பது குறித்து டி.ஜி.பி அறிக்கையாக சொல்ல வேண்டும். தமிழக போலீஸில் எத்தனை பேர் கடந்த ஆண்டு கைதாகி உள்ளார்கள். மனிதர்கள்தான் அமைப்புகளுக்குள் இருக்கிறார்கள். தனி மனிதனை மனிதனாக பாருங்கள். யார் தவறு செய்திருந்தாலும் விடக் கூடாது. அமலாக்கத்துறையை, தமிழக போலீஸை ஆதரிப்போம், மின்சாரத்துறையை ஆதரிப்போம். ஆனால், தவறு செய்பவர்களை எதிர்ப்போம்.” எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications