'மீன் கூடையா? இறங்கு இறங்கு..' அடாவடி செய்த அரசு பஸ் டிரைவர், நடத்துநர்.. அதிரடி சஸ்பெண்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மீனவ மூதாட்டி ஒருவரை துர்நாற்றம் அடிப்பதாகக் கூறி அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் அரசுப் பேருந்தில் இருந்து இறக்கவிட்டுள்ள சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் "மீன் வித்திட்டா வர்ற.. நாறுது இறங்கு இறங்கு" என கூறி அரசு பேருந்தில் இருந்து நடத்துநரால் இறக்கி விடப்பட்ட மீனவ மூதாட்டி ஒருவர் பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் நியாயம் கேட்கும் பரிதாப வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வயது முதிர்ந்த மூதாட்டியான இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலை தலைசுமையாக ஆக மீன்களை சுமந்து குளச்சல் பகுதியில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள மீன்களை மாலையில் குளச்சல் மார்க்கெட்டில் விற்பனை செய்வார்.

இரக்கமற்ற அரசு பேருந்து நடத்துனர்
மீன்களை விற்பனை செய்தபின் இரவு மகளிருக்கான அரசு இலவச பேருந்தில் வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் செல்வம் நேற்று மீன்களை விற்பனை செய்துவிட்டு இரவு குளச்சல் பேருந்து நிலையத்தில் வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். செல்வத்தைக் கண்ட பேருந்து நடத்துநர் அவர் மீது துர்நாற்றம் வீசுவதாகவும், மீன் கூடை நாற்றத்தால் பேருந்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்றதோடு, "மீன் வித்திட்டா வர்ற.. நாறுது இறங்கு இறங்கு" எனக் கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.

ஆதங்கத்துடன் நியாயம் கேட்ட பெண்
பல பயணிகள் முன் நடத்துநர் திட்டியதால் அவமானமும் ஆத்திரமுமடைந்த மூதாட்டி செல்வம் , பேருந்து நிலைய நேரக் கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று இது என்ன ஞாயம் பேருந்தில் ஏறிய பொம்பளையை எப்படி இறக்கி விடலாம் பெட்டிசன் கொடுப்பேன் கத்தி கூச்சலிட்டதோடு தனது ஆதங்கத்தை அங்கு நின்ற பொதுமக்களிடம் கொட்டி தீர்த்தார்.

கண்ணீர் வடித்த பெண்
இறங்கி விட்ட நடத்துநரோ என்ன நடத்தது என்று ஒன்றும் அறியாதவர் போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நின்று கொள்ள அந்த மூதாட்டியோ "மீன் வித்திட்டா வர்றே நாறும் இறங்கு இறங்கு" என்று நடத்துநர் கூறியதாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்ததோடு வாணியக்குடி வரை நான் நடக்க வேண்டுமா என கண்கலங்கிய படி பேருந்து நிலைய சுற்று சுவரில் சாய்ந்தபடியே நின்றார்.

நடத்துனருக்கு கடும் கண்டனம்
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாக இது பேருந்தில் நடக்கும் நவீன தீண்டாமையா எனக் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் அந்த பேருந்து நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications