வீடு கட்ட ஆசைப்பட்ட ராணுவ வீரர்.. கையை நீட்டி, கையும் களவுமாக சிக்கிய கன்னியாகுமரி அரசு ஊழியர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வடக்குதாமரைகுளம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர், குலசேகரபுதூரை ஒட்டிய மலையடிவாரத்தில் இடம் வாங்கி போட்டிருந்தார். அங்கு வீடு கட்ட விரும்பிய அவர், வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற விண்ணப்பித்தார். அவருக்கு வீடு கட்ட தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வன ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்குதாமரைகுளம் பகுதியை சேர்ந்த 47 வயதாகும் மகாராஜ பிள்ளை என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் குலசேகரபுதூர் பகுதியில் மலையடிவாரத்தில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தில் வீடு கட்ட மகாராஜ பிள்ளை திட்டமிட்டார்.

அதற்காக இவர், வனத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டியது அவசியம் ஆகும். அப்போது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட பல்வேறு வசதிகளை பெற முடியும். இதன் காரணமாக கடந்த 16-9-2024 அன்று நாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மகாராஜ பிள்ளை விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து வந்தது. இதனிடையே பூதப்பாண்டி சரகத்துக்கு உட்பட்ட வன மர குடோன் பாதுகாவலர் பால்ராஜ் திடீரென மகாராஜ பிள்ளையை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது அவர் 'தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும். இந்த பணத்தை தீபாவளிக்கு பிறகு மாவட்ட வன அலுவலகத்துக்கு கொண்டு வாருங்கள்' என்று கூறினாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஜபிள்ளை 'எதற்காக லஞ்சம் கேட்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். அப்போது பால்ராஜ், 'நிறைய செலவு உள்ளது, பணம் தந்தால் தான் சான்று கிடைக்கும்' என்று மிரட்டும் தொனியில் பேசினாராம். இந்த உரையாடலை மகாராஜபிள்ளை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
அத்துடன் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மகாராஜபிள்ளை இதுபற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். செல்போன் உரையாடலையும் போலீசில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து லஞ்சம் கேட்டு மிரட்டிய பால்ராஜை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மதியம் ரசாயன பொடி தடவிய இருபது 500 ரூபாய் நோட்டுகளை மகாராஜ பிள்ளையிடம் கொடுத்து பால்ராஜிடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தார்கள்.
அதன்படி அவரும் நேராக கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலகத்துக்கு வந்து அங்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த பால்ராஜிடம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். ரூபாய் நோட்டுக்களை பால்ராஜ் உடனே வாங்கினார். இதை அங்கு மறைந்திருந்து கவனித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக அங்கு சென்று பால்ராஜை கையும் களவுமாக பிடித்தனர். போலீசில் பிடிபட்டதும் பால்ராஜ் அதிர்ந்து போனார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து பால்ராஜை போலீசார் கைது செய்தனர். இதனிடைமயே கைதான சிறிது நேரத்திலேயே பால்ராஜை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications