சொத்து வரி பெயர் மாற்றம்.. அரண்டு போன அரசு ஊழியர்.. நாகர்கோவில் போனவருக்கு நடந்த நல்ல விஷயம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 18 சென்ட் நிலத்திற்கான சொத்துவரியை செலுத்தவும், பெயர் மாற்றம் செய்யவும் வேண்டி பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் தேவதாஸ் என்பவர் விண்ணப்பித்தார். அவரிடம் எழுத்தராக பணிபுரியும் ஜெஸ்டின் ஜெபராஜ் என்பவர் லஞ்சமாக 50000 கேட்டாராம். அவருக்கு தேவதாஸ் மறக்க முடியாத பாடத்தை கற்பித்துள்ளார்.பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது தாராளமாக லஞ்சஒழிப்புபோலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் லஞ்சம் கேட்ட ஆடியோவை வைத்து அல்லது லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை காண்பித்தால், அவர்களை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

இதன்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்புவார்கள். பின்னர் மறைந்திருந்து கைது செய்து சிறையில் அடைப்பார்கள். லஞ்சம் வாங்கிய அதிகாரி யாராக இருந்தாலும் சிறைக்கு போக வேண்டும். வேலையிலும் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். இந்த வழக்கில் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு ஊழியர் தான் நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும். இப்படிப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் லஞ்சம் வாங்குவது குறைவது இல்லை. ஒரு சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். என்பவருடைய சகோதரர் வெளிநாட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சகோதரரின் 18 சென்ட் நிலத்திற்கான சொத்துவரியை செலுத்தவும், பெயர் மாற்றம் செய்யவும் வேண்டி பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் தேவதாஸ் அண்மையில் விண்ணப்பிக்க சென்றுள்ளார்.
அங்கு எழுத்தராக பணிபுரியும் 38 வயதாகும் ஜெஸ்டின் ஜெபராஜ் என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என நிர்பந்தம் செய்தாராம். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தேவதாஸ், லஞ்ச பணத்தை குறைக்கும்படி கேட்டுள்ளார். பிறகு ரூ.20 ஆயிரம் கட்டாயம் தர வேண்டும் என ஜெஸ்டின் ஜெபராஜ் கறாராக கூறினாராம். அதற்கு தேவதாஸ், நாளை வந்து தருவதாக கூறி அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் லஞ்ச பணம் கொடுக்க மனமில்லாத தேவதாஸ், இதுகுறித்து நாகர்கோவிலுக்கு நேரடியாக கிளம்பினார். அங்குள்ள கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கன்னியமாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரை படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் தேவதாஸ், பாகோடு பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த ஜெஸ்டின் ஜெபராஜ், எலக்ட்ரீசியனாக பணிபுரியும் சுஜின் (37) என்பவருடைய உதவியுடன் பணத்தை வாங்கினார். அந்த சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து 2 பேரையும் லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக மடக்கினர். பின்னர் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications