அனுமன் ஜெயந்தி.. குமரி சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் 1.08 லட்சம் லட்டு பிரசாதம் தயார்
கன்னியாகுமரி: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுசீந்திரம் தாணுமலையான் சுவாமி ஆஞ்சநேயர் கோவிலில் 1.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் மிகவும் பழமைவாய்ந்த கோவில் தாணுமாலயசுவாமி கோவில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணையப்பெற்றதால் இக்கோவில் உருவானதாக தலவரலாறு கூறகிறது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில். தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

இந்திரன் தனது சாபம் நீங்க மும்மூர்த்திகளையும் ஒருசேர பூஜித்து வணங்கிய இடமே சுசீந்திரம் என்பது புராண வரலாறு. அதனால் இந்திரன் இந்த கோவிலுக்கு அர்த்தசாமத்தில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அத்திரி மகரிஷி முனிவருக்கும், அவரது மனைவி அனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.
மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர்திருவிழா, மாசித்திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய விழாக்களாகும். இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
இக்கோவில் உள்ள 18 அடி உயரமுடைய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உலகப்புகழ் பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத மூல நட்சத்திர தினத்தன்று நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இங்கு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 23ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில், சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்க 1.08 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 1.5 டன் கடலை மாவு, 5 டன் சக்கரை, 150 டின் எண்ணெய், 50 கிலோ ஏலக்காய் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், 50 கிலோ முந்திரி, 50 கிலோ நெய், 20 கிலோ கிராம்பு கொண்டு லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் அடுத்த மாதம் ஜனவரி 5ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும், அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 6-ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். முன்னதாக வருகிற 26ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.












Click it and Unblock the Notifications