விவசாயிகளுக்கு கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக அடுத்த மாதம் (ஜூன்) தொடக்கத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் நாற்றங்கால் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முப்போகம் விளையும் மாவட்டமாக இருக்கிறது. தண்ணீருக்கு குறையில்லாத மாவட்டமாக இருக்கிறது.இங்கு நெல் பயிர் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக அடுத்த மாதம் (ஜூன்) தொடக்கத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. கன்னிப்பூ நெல் சாகுபடி தொடங்கி கும்பப்பூ நெல் சாகுபடி நிறைவு பெறும் வகையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

இந்த ஆண்டு கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். குளத்து பாசன பகுதிகளில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளும் பிற பகுதிகளில் நெல் வயல்களை உழுது பண்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளுக்கு ஏதுவாக விதைகள், உரம் போன்றவை வேளாண்மை துறையால் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே நெல் நாற்றங்கால் பணிகள் தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதாவது நாற்றங்கால் பணிகளை இந்த மாத இறுதியில் முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணி மேற்கொள்ள விவசாயிகள் முன் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் கன்னிப்பூ நெல் அறுவடை முடிந்தவுடன் காலம் தாழ்த்தாமல் கும்பப்பூ நெல் சாகுபடியை தொடங்க வேண்டும். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் வருகிற 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும். எனவே விவசாயிகள் 2-ம் பருவ நெல் அறுவடை பணிகளை 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications